புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கிள்ளுக்கோட்டை பகுதியில் பல்வேறு குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றிலிருந்து நால்வரும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்களை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் விவசாயமும் பாதிக்கிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தின் சார்பாக மக்கள் மனு கொடுத்தனர்.

அது குறித்து அங்கு வந்திருந்த கிள்ளுக்கோட்டை கிராம மக்கள் கூறுகையில்
முற்றிலும் விவசாயத்தையும் விவசாய கூலி வேலையையும் நம்பி எங்கள் ஊர் மக்கள் இருக்கிறார்கள். சுமார் 1500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறோம். எங்களுக்கு வாழ்வாதாரம் இந்த விவசாய நிலங்கள் தான். அண்மைக்காலமாக வெளியூரை சேர்ந்தவர்கள் இங்கு உள்ள நிலத்தை ஆக்கிரமித்தும் விலைக்கு வாங்கியும் அதில் குவாரிகள் அமைத்து கற்களை வெட்டி எடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் எங்கள் கிராமத்தில் விவசாயம் பாதிக்கிறது.

கனிம வளம் கொள்ளை போகிறது. இங்கு இயங்கும் குவாரிகளில் ஒரு சிலவற்றுக்கு மட்டும் தான் அனுமதி பெற்று இருக்கிறார்கள். மற்ற குவாரிகள் அனுமதி பெறாமலும் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகள் ஊரைச் சுற்றி நான்கு புறமும் இயங்குகின்றன. வெளியூர்க்காரர்கள் தான் அதை செயல்படுத்தி வருகிறார்கள். கல்குவாரிகளின் குழி ஆழம் அதிகரிக்க அதிகரிக்க எங்களது விவசாய நிலங்களுக்கு வரக்கூடிய தண்ணீர் வராமல் விவசாயம் முற்றிலும் பாதிக்கிறது. மேலும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ மாணவியருக்கு இந்த லாரிகளால் பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு லாரி இளைஞரை விபத்து ஏற்படுத்தி விட்டு சென்று விட்டது. அந்த இளைஞர் இறந்துவிட்டார். இதுபோல் அடிக்கடி விபத்து நடப்பதால் ஊருக்குள் வந்து செல்லும் இந்த லாரிகளால் தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே குவாரிகளை மூடுவதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை மூட முடியாது என்றால் லாரிகளை வேறு வழிகளில் திருப்பி விட்டு செல்லட்டும் ஊருக்குள் இந்த லாரிகள் வராமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதே கருத்தை இங்கு வந்திருந்த அனைவரும் தெரிவித்தனர்.




