தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்று காலை சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நண்பகல் 12.30 மணிக்கு டெல்லி சென்றடைய உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலகமான சேவா தீர்த் பவனில் சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்துகிறார்.
பின்னர் மாலை 6.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குகிறார்.
மேலும் இன்று இரவு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை காலை காங்கிரஸ் முன்னணி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து அரசியல் மற்றும் மாநில நலன் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தும் முக்கிய பயணமாக இந்த டெல்லி சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது.





