• Sun. May 24th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் 42ஆவது பட்டமளிப்பு விழா..,

Byமுகமதி

May 23, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கியமான கல்லூரி மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியாகும். 140ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னரால் தொடங்கப் பட்ட இக்கல்லூரியில் பயின்றவர்கள் இப்போதும் பல்வேறு துறைகளில் ஆளுமை மிக்கவர்களாக இருந்து கோலோச்சி வருகிறார்கள்.

அது வெளியில் தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். ஆனால் பல்வேறு தருணங்களில் அந்த ஆளுமைகள் பற்றிய தகவல்கள் வெளிவரும்போது அவர்கள் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற பெருமையை ஒவ்வொரு தருணமும் மற்றவர்களுக்கு உணர்த்துவதைப் பார்க்க முடியும்.

இன்று நடைபெற்ற 42ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு இக்கல்லூரியின் முதல்வர் மதிப்புமிகு புவனேசுவரி தலைமை வகித்தார். திருச்சி மண்டலக் கல்வி இணை இயக்குநர் முனைவர் க.இராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இன்று பட்டம் பெற்ற இளங்கலை, முதுகலை, ஆய்வறிஞர், ஆய்வு நிறைஞர் மாணவ மாணவியரை வாழ்த்திப் பேசினார்.
அவர் பேசுகையில் இது அரசுக் கல்லூரி என்பதால் நாம் படிக்கும் கல்விக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வந்து படித்துச் செல்கிறோம். நீங்கள் கற்றுப் பெற்றிருக்கும் கல்விக்கு தனியார் கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் என்றால் எவ்வளவு செலவு செய்திருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆனால் அத்தனை செலவுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாணவாக்கருக்கும் பல லட்சம் செலவு செய்துதான் உங்களுக்குக் கல்வி வழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசு காலத்திற்கேற்ப பல திட்டங்களைத் தீட்டியும் சட்டங்களை இயற்றியும்தான் கல்வி வழங்குகிறது. ஆனால் அதற்கான செலவு என்பது இதே சமூகத்தில் பொது மக்களிடம் இருந்துதான் பெற்று உங்களுக்குக் கல்வி வழங்குகிறது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இப்போது நீங்கள் பெற்றிருக்கும் பட்டங்களைக் கொண்டு எந்த உயரத்திற்குச் சென்றாலும் இந்த சமூகத்திற்கு, அதாவது உங்களது கல்விக்கு உறுதுணையாக இருந்த இந்தச் சமூகத்திற்கும் உங்களை வாழ்வில் உயர்த்திப் பார்க்க வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் உங்களது பெற்றோருக்கும் செய்ய வேண்டிய கடமையைத் தவறாது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வாழ்த்தியதோடு இன்று பட்டம் பெற்ற 1374 மாணவ மாணவியருக்கும் தனது கையால் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். பல மாணவ மாணவியரின் பெற்றோரும் தங்களது பிள்ளைகள் பட்டம் பெறும் காட்சிகளைக் காண நேரில் வந்திருந்தனர்.