• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் போராட்டம்..,

BySeenu

May 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி காவல் நிலையம் முன்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடிய விடிய நடத்திய போராட்டம், காவல்துறையினரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்தது.

கோவை, சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21 அன்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இருட்டியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீஸாரின் தீவிரத் தேடுதலில், கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சூலூர் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி, சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். போலீஸார் தனிப்படை அமைத்து நடத்திய அதிரடி விசாரணையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 2 சந்தேக நபர்கள் பிடிபட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் கார்த்தி (வயது 33) என்பவன் சிறுமியைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். மேலும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவனையும் போலீஸார் பிடித்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு சூலூர் காவல் நிலையத்தின் முன்பாக விடிய விடியத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.”குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்யப்பட வேண்டும்” என்று அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர். இரவு முழுவதும் நீடித்த இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்தது, அங்கு குவிக்கப்பட்டிருந்த உயர்தர போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் நள்ளிரவிலும், அதிகாலையிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். “குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூலூர் காவல் நிலைய முன்பாக இன்னமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோவை பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.