மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில், நகராட்சிப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவாஜி நகர் பகுதியில் தேங்கிக் கிடக்கும் மலைபோல குப்பைகளால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ராஜு என்பவர் கூறுகையில், ‘மழை பெய்தால் இப்பகுதியின் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது. சாக்கடைகள் அனைத்தும் குப்பைகளால் அடைபட்டு, துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் தொல்லையும் பலமடங்கு அதிகரிக்கிறது’ என்கிறார். மேலும், இரவு நேரங்களில் இப்பகுதியில் எலிகள், பாம்புகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களும் குழந்தைகளும் வெளியே நடமாடுவதற்குக் கூட அஞ்சி நடுங்கும் சூழல் நிலவுவதாகவும் அவர் வேதனை தெரிவிக்கிறார்.

சாலைகளில் பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிகள் நீண்ட நாட்களாக மூடப்படாமல் ஆபத்தான முறையில் கிடக்கின்றன. இதனைச் சரி செய்ய வேண்டிய நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்களே ஒன்று சேர்ந்து தற்காலிக ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்
எனவே, இனியாவது விழித்துக்கொள்ளும் நகராட்சி நிர்வாகம், இப்பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளைத் தினசரி அகற்றிடவும், பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.



