• Tue. Oct 20th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கோவையில் கோலாகலமாக நிறைவடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழா!

BySeenu

Oct 20, 2026

​ நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு, தீமையை அழித்து நன்மை வென்றதைக் கொண்டாடும் வகையில் கோவையில் பாரம்பரியமிக்க அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் உடலில் கத்தியால் வெட்டியபடி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்திய நிகழ்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து உள்ளது.

கோவையின் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாக்களில் ஒன்றான இந்நிகழ்ச்சி, கடந்த 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாரம்பரியமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

விஜயதசமி தினமான இன்று, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதை முன்னிட்டு பக்தர்கள் உடலில் கத்தியால் லேசாக வெட்டிக்கொண்டு ரத்தம் வழிய ஊர்வலமாகச் சென்று சவுடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது இக்கோவிலின் முக்கிய ஐதீகமாகும்.

அதன் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை கோவை சாய்பாபா கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த விசேஷ ஊர்வலம், நகரின் முக்கியப் பகுதிகளான பூ மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், ராஜவீதி வழியாகச் சென்று ஐந்து மூக்குப் பகுதியில் அமைந்து உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது.

​ இந்த ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு தங்களது உடலில் கத்தியால் வெட்டியபடி நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

​ உடல் முழுவதும் ரத்தம் வழிய வீதி வழியாக ஊர்வலமாக வந்த பக்தர்களை, வழநெடுகிலும் திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர். மேலும், காயங்கள் மற்றும் தொற்று ஏற்படாமல் இருக்க பக்தர்களின் உடலில் மஞ்சள் தூள் வைத்து அவர்களை ஆசீர்வதித்து வரவேற்றனர்.
​பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்தத் திருவிழாவால் கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஆன்மீகச் சூழலும் பெரும் கூட்ட நெரிசலும் காணப்பட்டது.