• Tue. Oct 20th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்தில் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் தின விழா கொண்டாட்டம்..,

ByPrabhu Sekar

Oct 20, 2026

தரையில் இருந்து 46,000 அடி உயரம் வரை பறக்கும் விமானங்களின் பாதுகாப்புக்காக, ஏ.டி.சி. எனப்படும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் மையத்தில் பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

விமானங்களின் தன்மை, திசைவேகம், இயக்க வேகம், குறிப்பிட்ட வான்வெளியில் அவற்றின் இயக்கவியல் ஆகியவற்றை தெளிவாக அறிவதற்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சிகள் தீவிரமானவை, நடைமுறைப் பணிகளை மையமாகக் கொண்டவை. தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையானவை. விமான இயக்கங்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.

விமானக் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களின் உடல் மற்றும் மனநலத் தகுதிகள் தினசரி மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவர்கள் உடல் மற்றும் மனநலத் தகுதியுடன் இருப்பதை உறுதி செய்வது கட்டாயமாகும்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சு

இந்த நவீன கால உலகில் வான்வெளிப் போக்குவரத்து பெரும்பாலான மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் வான்வெளிப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வான்வெளியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை முறைப்படுத்தி, விமானப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஏ.டி.சி. எனப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் உள்ளது.

வானில் பறக்கும் பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள், மருத்துவ ஏர் ஆம்புலன்ஸ் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பறக்கும் வாகனங்களையும் கண்காணித்து, முறைப்படுத்தி ஒழுங்குபடுத்துவது இந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புதான்.

ஏ.டி.சி. எனப்படும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் சர்வதேச அளவில் தொடங்கப்பட்டு, தற்போது நூற்றாண்டைக் கடந்து 104 ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்னை விமான நிலையத்தில் 1932-ல் தொடங்கப்பட்ட ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் 94 ஆண்டுகளாகி, நூற்றாண்டை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் தொடங்கப்பட்ட அக்டோபர் 20-ம் தேதி, உலக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதைப்போல் இன்று செவ்வாய்க்கிழமை, சென்னை விமான நிலைய ஏ.டி.சி. சார்பில், ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் தினக் கொண்டாட்டம் சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

காலையில் இருந்து பிற்பகல் வரை நடைபெற்ற இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியதாவது:-

இந்திய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் கையாளும் வான்வெளிப் பரப்பளவு சுமார் 28 லட்சம் சதுர கடல் மைல்கள் ஆகும். இது நமது நாட்டின் நிலப்பரப்பளவை விட சுமார் மூன்று மடங்கு பெரியது.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இந்தப் பரந்த வான்வெளியில் பறக்கின்றன. அவற்றின் பாதுகாப்பையும், இயக்கங்களையும் கண்காணித்து உறுதி செய்யும் பொறுப்பு, 24 மணி நேரமும், ஆண்டின் 365 நாட்களும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் மையங்களில் பணியாற்றும் கட்டுப்பாட்டாளர்களின் கைகளில் உள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் விமானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விமானங்கள் ஒழுங்காகவும், விரைவாகவும், தேவையற்ற தாமதம் எதுவும் இன்றி இயங்குவதற்கும் பொறுப்பேற்கின்றனர்.

இந்த நிலையில் நமது நாட்டில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், புதிய விமான நிலையங்கள் உருவாகி வருவதும், பயணிகள் விமானப் பயணத்தை அதிக அளவில் தேர்ந்தெடுப்பதும், விமானங்களின் தொழில்நுட்பத் திறன் மேம்பட்டு வருவதும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பொறுப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தரையில் இருந்து சுமார் 46 ஆயிரம் அடி உயரம் வரையிலான வான்வெளி இயக்கங்கள் வரை, அந்தந்த பிரிவுகளின் பொறுப்புக்கு ஏற்ப கட்டுப்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தொழிலுக்கு விமானங்களின் தன்மை, திசைவேகம், இயக்க வேகம், மாற்றம் மற்றும் குறிப்பிட்ட வான்வழியில் அவற்றின் இயக்கவியல் ஆகியவற்றை புரிந்துகொள்வதற்கான சிறப்புப் பயிற்சி அவசியமாகும்.

இந்தப் பயிற்சிகள் தீவிரமானவை. நடைமுறைப் பணியை மையமாகக் கொண்டவை. தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையானவை. விமான இயக்கங்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் ஏற்படாத வகையில் இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானக் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களின் உடல் மற்றும் மனநலத் தகுதிகள் தினசரி மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. எப்போது பணிக்கு அழைக்கப்பட்டாலும் பாதுகாப்பாக பணியாற்ற தேவையான உடல் மற்றும் மனநலத் தகுதியுடன் அவர்கள் இருப்பதை உறுதி செய்வது கட்டாயமாகும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.