• Tue. May 19th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் 5வது உலக மாநாடு..,

Byமுகமதி

May 19, 2026

புதுக்கோட்டையில் ஐந்தாவது உலக தமிழ் ஹைக்கூ கவிதைகள் மாநாடு நடைபெற்றது. காலை தொடங்கிய நிகழ்வானது இரவு வரை நடைபெற்றது. இதற்கு முன்பு நான்கு மாநாடுகள் நடைபெற்றதை காட்டிலும் இந்த முறை ஐந்தாவது மாநாட்டில் நூற்றுக்கணக்கான கவிஞர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை சிங்கப்பூர் மலேசியா துபாய் மாலத்தீவு போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் கவிஞர்கள் வந்திருந்தார்கள். கவிதை வாசிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையிலும் மாலையில் 45 புத்தகங்கள் வெளியிட்டு விழாவும் ஒரே மேடையில் நடைபெற்றது. புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் மற்றும் இனிய நந்தவனம் மாத இதழ் தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இணைந்து இந்த மாநாடு நடத்தி வரும் நிலையில் அடுத்த மாநாடு மலேசியாவில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாடுகள் குறித்து புதுக்கோட்டை தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறுகையில் இந்த மாநாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 250 ஹைக்கூ கவிதை எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களது கவிதைகளை வாசிப்பதற்காக வாசிப்பு அரங்கம் அனுபவ அரங்கம் என தொடர்ந்து 45 பேருடைய புத்தகங்களும் ஒரே நாளில் வெளியிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு அந்த மாநிலம் திருச்சியிலும் மதுரையிலும் இலங்கையிலும் நடைபெற்ற இந்த தமிழ் ஹைக்கூ உலக ஐந்தாவது மாநாடு இங்கு புதுக்கோட்டையில் நடைபெறுவது புதுக்கோட்டைக்கும் பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் தமிழ்ச் சங்கம்தான் அதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இங்கும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

ஹைக்கூ கவிதை வடிவத்தை தமிழ் சங்கமே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அதுதான் சான்று. தமிழகத்தில் இன்று ஹைக்கூ கவிஞர்கள் எண்ணற்றவர்கள் உருவாகி இருக்கிறார்கள். இயற்கையை, சமூகச் சூழலை எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிற ஆற்றல் படைத்த இந்த மூன்று வரி கைக்கூவை நம்முடைய மகாகவி பாரதி தான் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தினான்.

பாரதிக்கு பிறகு இந்த கவிதை வடிவத்தை எல்லோரிடத்திலும் கொண்டு சென்ற பெருமை கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு உண்டு. அதைத்தொடர்ந்து அமுத பாரதி, அறிவுமதி, மு.முருகேஷ் போன்றவர்கள் மட்டுமல்லாத இன்று ஏராளமானோர் ஹைக்கூ கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறார்கள்.

இனிய நந்தவனம் சந்திரசேகர் அவர்கள் தூண்டில் என்கிற பெயரில் ஹைக்கூ கவிதைகளுக்காகவே ஒரு இதழை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
முதல் மாநாட்டை தொடங்கியவரே நந்தவனம் சந்திரசேகர் தான். புதுக்கோட்டையில் நடைபெறும் இந்த ஐந்தாவது மாநாட்டை தொடர்ந்து அடுத்து ஆறாவது மாநாடு மலேசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடுகள் ஒவ்வொரு மே மாதத்திலும் நடைபெற்று வந்திருக்கிறது. இது கோடை காலம் என்பதால் இந்த கோடை காலத்தில் ஹைக்கூ பூக்களை பூக்க வைப்பது தான் எங்களது நோக்கம். இது கூட்டு முயற்சியாக எடுத்து மாநாடாக நடத்தி வெளிப்படுத்தி இருக்கிறோம்.

இதற்காக நாங்கள் 150 பேரைத்தான் இலக்காக வைத்திருந்தோம். அது 200 ஆக மாறி இப்போது 250 பேராக வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் 250 பேருக்கு மேல் எங்களையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதா என ஏக்கத்தோடு கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு செய்து வந்ததால் 250 பேருக்கு தான் சான்றிதழ்கள் உட்பட அனைத்தும் செய்ய முடிந்திருக்கிறது. வருங்காலத்தில் இன்னும் கூடுதல் சிறப்புகளோடு செய்வோம் என்றார்.