• Tue. May 19th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட 3பேர் உயிரிழந்த சம்பவம்..!

ByS.Ariyanayagam

May 19, 2026

ஆத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கருப்பையா (41) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா (37) என்ற மனைவியும், பிரவீனா (15) சிவானி (12) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், இப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்து வந்த மழை காரணமாக,
அக்ரஹாரத் தெருவில் மாடியில் மின்சார வயறு அறுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மாடியில் குடியிருந்து வந்த கருப்பையா மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி சுதா அருகில் சென்றுள்ளார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர்.

கணவன் மனைவி அலறல் சத்தம் கேட்டு மாடி வீட்டிற்கு கீழ் தளத்தில் குடியிருந்த முத்துப்பாண்டி – மாரியம்மாள் தம்பதியினரின் கல்லூரி மாணவர் சுப்பிரமணியசிவா (18) அவர்களை காப்பாற்ற சென்ற போது, மின்சாரம் பாய்ந்து அவரும் சம்பவ இடத்தில் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மூன்று பேரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், செம்பட்டி காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்து ஆத்தூர் கிராம பொதுமக்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.