கோவை, மதுக்கரை அடுத்து உள்ள போடிபாளையம் பகுதியில், குடியிருப்பு ஒன்றின் ஷூ ரேக்கிற்குள் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பீதியை ஏற்படுத்தியது.

வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணி வைக்கும் அடுக்கிற்குள் (Shoe Rack) பாம்பு பதுங்கி இருந்ததைக் கண்ட குடும்பத்தினர், அலறியடித்துக் கொண்டு ஓடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், நேற்று காலை தனது வீட்டின் வெளியே உள்ள ஷூ ரேக்கை பார்த்த போது, அதற்குள் ஏதோ கருப்பாக அசைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். உற்று நோக்கிய போது, சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று சுருண்டு பதுங்கி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் இது குறித்து மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரர் சுரேந்தருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரேந்தர், ஷூ ரேக்கிற்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாகப் பிடிக்க சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு, ஆக்ரோஷமாகச் சீறிய அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து சாக்குப்பையில் அடைத்தார். பிடிபட்ட பாம்பு சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை வனப்பகுதிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர்.
கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், குளுமையைத் தேடி பாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வன உயிரின ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.




