தேர்தல் வந்துவிட்டால் சுவர்கள் கண்ட இடங்கள் எல்லாம் வாக்கு சேகரிக்கும் விளம்பர பலகையாக மாறிவிடுவது வழக்கம். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்கும் விதமாக தேர்தல் நாள் கட்சி அல்லது சிகிச்சை வேட்பாளர் பெயர், படம், வாக்களிக்க வேண்டிய சின்னம் எல்லாம் வரைந்து வைத்திருப்பார்கள்.

பெரும்பாலான சுவர்களை வீடுகளாக இருந்தாலும் கூரையில்லாத வீடுகளாக இருந்தாலும் வணிக நிறுவனங்களாக இருந்தாலும் பொது இடங்களாக இருந்தாலும் அதனை விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முன்கூட்டியே அந்த இடத்தை கட்டம் கட்டி வெள்ளை அடித்து இந்த இடம் இன்னாருக்காக விளம்பரம் செய்வதற்கான இடம் என்பதையும் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அதில் நாம் மேற்சொன்னவாறு விளம்பரங்களை பயன்படுத்தி கொள்வார்கள். ஒரு கட்டத்தில் நெருக்கடி வரும்போது இது விளம்பர சுவர்தானே என்று இருக்கக் கூடாது தேர்தல் முடிந்த பிறகு ஏற்கனவே எனது வீட்டு சுவர் எப்படி இருந்ததோ அப்படியே திரும்பவும் பெயிண்டிங் செய்து தர வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் சுவர்களை தேர்ந்த காலத்தில் வாடகைக்கு விடுபவர்களும் உண்டு. இன்னும் சில இடங்களில் ஒரு வேடிக்கை பார்க்க முடியும். ஒரு வீடு என்றால் இடது பக்கம் ஒரு கட்சியினருக்கும் வலது பக்கம் இன்னொருவருக்குமாக விளம்பரங்கள் செய்ய அனுமதித்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று இருந்து விடுபவர்களும் உண்டு.

இதையெல்லாம் தாண்டி புதுக்கோட்டையில் உள்ள திமுக பிரமுகரான மேட்டுப்பட்டி சின்னத்துரை என்பவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளாக இருந்தாலும் சரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளாக இருந்தாலும் சரி புதுக்கோட்டையில் பெரிய பெரிய இடங்களில் சாலை ஓரங்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரங்களை வரைந்து வைத்திருப்பார். திமுகவிற்கு அனுதாபியாக இருக்கும் இவரது விளம்பரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமாக பேசப்படும். அந்த அளவுக்கு பிரமாண்டமாக எழுதி வைத்திருப்பார். இந்த நிலையில் தான் இப்போது சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற எந்த கட்சியிலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்கவில்லை. இன்று வரை திமுகவிலும் அதுதான் நிலை. விருப்பமனு கொடுத்தவர்களிடம் தலைமை இப்போதுதான் நேர்காணல் நடத்தி முடித்து இருக்கிறது.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலையில் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தனது விருப்பத்தின் காரணமாக வேட்பாளர் பெயர் அறிவித்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்கிற வகையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் படமும் பெயரும் மற்ற விளம்பரங்களும் சேர்த்து மேட்டுப்பட்டி பகுதியில் வீட்டு சுவர்களில் வரைந்து வைத்து அசத்தியிருக்கிறார். இவரது செயலை மற்றவர்கள் ஆர்வமாக பார்த்துவரும் நிலையில் திமுகவினர் இவரை பாராட்டி வருகிறார்கள்.




