• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திமுக அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByPrabhu Sekar

Mar 17, 2026

சென்னை அடுத்த தாம்பரத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கழக மகளிரணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ப. வளர்மதி தலைமையேற்றார்.

இந்த நிகழ்வில், மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பாராளுமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்துவதில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திறமையற்றதாக செயல்படுகிறது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கூட்டணியினர் கண்டன பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனால், தாம்பரம் பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வாறு, திமுக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் வலுவான கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.