• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு பேட்டி..,

ByPrabhu Sekar

Feb 4, 2026

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சுந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற விவாதங்கள், மத்திய பட்ஜெட், தமிழக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை திமுக முழுமையாக படிக்க வேண்டும் என்றும், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். “மத்திய அரசு எதுவும் தரவில்லை என்று திமுக கூறுவது மக்களை ஏமாற்றும் முயற்சி. மக்கள் படித்தவர்கள், அவர்கள் பட்ஜெட்டை படித்து உண்மையை புரிந்து கொள்வார்கள்” என்றார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறித்து பேசிய குஷ்பு, “பாராளுமன்ற நேரத்தை வீணாக்காமல் முக்கியமான விஷயங்களை பேச வேண்டும். இதுவரை அவர் முக்கியமான எந்த விவாதத்தை முன்வைத்துள்ளார் என்பதை காங்கிரஸ் கூட சொல்ல முடியுமா?” என விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் எளிதாக கிடைப்பதாகவும், பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் டாஸ்மாக் மூலம் மதுபானம் கிடைப்பது கவலைக்குரியது என்றும் கூறினார். “தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறதென்றால் அது டாஸ்மாக் மூலமாகத்தான்” என்றார்.

தேர்தல் அரசியல் குறித்து பேசுகையில், “நான் கட்சியின் துணைத் தலைவர். கட்சி என்ன பணியை தருகிறதோ அதை செய்வேன். எந்த தொகுதி என்பது முக்கியமல்ல; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற உழைப்பேன்” என்றார்.

மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார்.

நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “மேடை நாகரீகம் என்று ஒன்று உள்ளது. நடிகராக இருப்பதும், அரசியல் தலைவராக இருப்பதும் வேறு. அது அவரது தனிப்பட்ட கருத்து; அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.

திமுக–காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்த குஷ்பு, “எவ்வளவு நாள் தான் முதுகை சொரிந்து கொண்டு இருக்க முடியும். அந்த கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்றே சந்தேகம் உள்ளது” எனக் கூறினார்.

எஸ்.வி. சேகர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர், “பாடல் பாடியதற்காக விமர்சனம் செய்வது ஏற்கமுடியாது” என தெரிவித்தார்.