பகலில் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து, இரவு நேரங்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை தாம்பரம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களாக செல்போன் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்த நிலையில், போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த குற்றவாளி தற்போது சிக்கியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஜோதி, செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல தாம்பரம் பேருந்து நிலையம் வந்த ஜோதி, உடல்நலக் குறைவு காரணமாக ரயில் நிலையம் அருகே நடைபாதையில் அமர்ந்து ஓய்வெடுத்தபோது தூங்கிவிட்டார்.
அப்போது ஜோதியின் கைப்பையில் இருந்த செல்போனை திருட முயன்ற இளைஞரை அவர் விழித்துக் கொண்டு கூச்சலிட்டதால், அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக பிடித்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், சிவகங்கை மாவட்டம் சதுரசங்கோட்டையைச் சேர்ந்த ஜான்சன் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஜான்சன், ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தவர். முன் கோபம் அதிகம் என்பதால் ஏற்கனவே பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு மூன்று முறை சிறைக்கு சென்றதாகவும், நண்பருடன் சேர்ந்து கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.
சென்னைக்கு வந்து வேலை பார்த்த ஜான்சன், மதுப்பழக்கம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக கடந்த ஏழு மாதங்களாக இரவு நேரங்களில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே நடைபாதையில் தூங்கிக்கொண்டே, அங்கு தூங்கும் பயணிகளிடமிருந்து செல்போன்களை திருடி வந்ததாக ஒப்புக்கொண்டார். திருடிய செல்போன்களை அதே பகுதியிலேயே குறைந்த விலைக்கு விற்று வந்ததும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

ஜான்சனிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்வதற்கு முன், “வெளியே வந்ததும் திருந்தி வாழ்வேன்” என போலீசாரிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
சிறைவாசத்துக்குப் பிறகு அவர் உண்மையில் திருந்தி வாழ்வாரா என்பதை காலமே பதில் சொல்லும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.










