• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வாலிபரை கொலை செய்து புதைத்த ஏழு பேர் கைது..,

பெங்களூருவைச் சேர்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து உடலைப் புதைத்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு, மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப்(40). இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த கலுவா(37). இவர்கள் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தங்கியிருந்து கண்ணாடி, அலங்கார விளக்குகள் விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஏப்.15 ஆம் தேதி, தேனியைச் சேர்ந்த மோகன் என்பவர், திலீப், கலுவா ஆகியோரை தேனி கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்துக்கு வரவழைத்து, அங்கிருந்து 4 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இருவரையும் காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், தேனி அருகே உள்ள தனியார் தோப்பில் வைத்து திலீப், கலுவா ஆகியோரிடம் நீங்கள் போலி நகைகளை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள்தானே என்று கேட்டு அவர்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து, கலூவை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு திலீப்பை மீண்டும் காரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து திலீப்பின் சகோதரி நிர்மலா, கடந்த ஏப்.24 ஆம் தேதி தேனி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கில் தேனி, கருவேல்நாயக்கன்பட்டி, வள்ளுவர் காலனியைச் சேர்ந்த சிங்கம் மகன் முகேஷ்பாண்டி(25), கருப்பசாமி மகன் ஆகாஷ்(19), சென்றாயன் மகன் முத்துப்பாண்டி((19), சக்கரைப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் இளையராஜா(37), செல்லம் மகன் முருகன்(45), முத்தனம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் சதீஷ்குமார்(32), தேனி, அரசு தொழில் பயிற்சி நிலையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சௌமியன்(31) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குறைந்த விலையில் தங்க நகைகளை விற்பனை செய்வதாகக் கூறி போலி நகைகளை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் திலீப்பை கடத்திச் சென்று தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததால் தேனி அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் தனியார் தோட்டம் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் திலீப்பின் உடலை புதைத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, ஜல்லிப்பட்டியில் அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்ரா கேல்கர் பாலசுப்பிரமணி, பெரியகுளம் வட்டாட்சியர் மருதுபாண்டி, தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலர் கற்பகவள்ளி ஆகியோர் முன்னிலையில் திலீப்பின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, அவரது சகோதரி நிர்மலாவால் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. உடல் கூராய்வுக்குப் பின்னர் திலீப்பின் உடல் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய மோகன் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் கூறினர்.