இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான “எஸ்.எஸ்.லாயல்டி’, 1919, ஏப்., 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் 1964 முதல், ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை, சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.
இந்திய துணைக் கண்டத்தை கடல் பரப்பு பெருமளவு சூழ்ந்துள்ளதால், சிந்து சமவெளி நாகரிக காலமான கி.மு.3000த்தில் இருந்தே, கடல்வழி பயணம் பிரபலமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின் இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை போர்க்காலத்தில் பாதுகாக்க வேண்டிய நமது கடற்படையும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக, இப்பகுதியில் சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கி வருகிறது.
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் இந்தியாவில் உள்ளது. சுமார் 90 சதவீதம் வாணிப பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கடல்சார் பகுதிகளின் முக்கியத்துவம், கடல் வழிகள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உணர்த்தும் அற்புதமான தினம் கடல்சார் தினம். நாட்டின் மொத்த கடல்சார் வளர்ச்சியில் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்பகுதி பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை ஏப்.,5 உணர்த்துகிறது.