• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நடுரோட்டில் ரவுடி கொலை – 5 பேரை அதிரடியாக தட்டித்தூக்கிய போலீஸ்!

ByP.Kavitha Kumar

Mar 20, 2025

சேலம் ரவுடி ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்யா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சேலம் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஜான் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஜான் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் வசித்து வந்தார். வழக்கு ஒன்றுக்காக சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட ஜான் தனது மனைவியுடன் நேற்று வந்தார். பின்னர் இருவரும் திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

ஈரோடு நசியனூர் பகுதியில் கார் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு கார் ஜான் காரின் மீது மோதியது. இதனிடையில் விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த மர்ம நபர்கள் ஜானை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைத் தடுக்க முயன்ற சரண்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த சரண்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். தகவலறிந்து அங்கு வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார், ஜானின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கார்த்திகேயன், நசியனூர் அருகே போலீஸாரிடம் பிடிபட்டார். அவர் அளித்த தகவலின்பேரில், பவானி பச்சப்பாளியில் பதுங்கியிருந்த மூன்று பேரை பவானி டிஎஸ்பி ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரைத் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றனர். இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவர்கள் சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ், சரவணன், பூபாலன் என்பது தெரியவந்தது. காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும், ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் ரவி, முதல்நிலைக் காவலர் லோகநாதன் ஆகியோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சேலத்தில் பதுங்கியிருந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவகுமார் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். இதுவரை இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.