கேரளா அதிகாரிகள் கலந்து கொள்ளாததால், தமிழக அதிகாரிகள் மட்டுமே நடத்திய இரு மாநில ஆலோசனை கூட்டம் நடத்தி சென்றனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தமிழக, கேரள போலீசார் மற்றும் வருவாய் துறையினரின் ஆலோசனைக் கூட்டத்தில், கேரள அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால், தமிழக அதிகாரிகள் மட்டுமே ஆலோசனை நடத்திச் சென்றனர்.
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை, ஒரு சில வியாபாரிகள் வாங்கி, ஆட்கள் மூலம் கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வருவாய்த்துறை பறக்கும் படையினரும் அவ்வப்போது அரிசி கடத்துபவர்களை பிடித்து கைது செய்வதோடு, வாகனத்தையும் அரிசியையும் பறிமுதல் செய்கின்றனர்.
இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. கூட்டத்தில் தமிழகம் சார்பில், தேனி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜலால் தலைமையில், குடிமைப் பொருள் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், பறக்கும் படை துணை வட்டாட்சியர் பரமசிவம், உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் வினோதினி, உத்தமபாளையம் தனி வருவாய் ஆய்வாளர் பாலாஜி மற்றும் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளா அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த தமிழக அதிகாரிகள் அவர்களுக்குள்ளாகவே ஆலோசனைக் கூட்டம் நடத்திச் சென்றனர்.
