• Wed. Apr 23rd, 2025

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையத்திற்கு புதிய பொறுப்பு!

ByP.Kavitha Kumar

Feb 21, 2025

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. இவர் எழுதிய செல்லாத பணம்’ என்ற நாவலுல், சாகித்ய அகாடமி விருது பெற்றது. இவர் தற்போது எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனை பாதுகாக்கவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாணையத்தில் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுபெற்ற நிலையில், தற்போது முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைவராகவும் மற்றும் ஜெ.ரேகாபிரியதர்ஷினி, உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, இவ்வாணையத்திற்கு காலிப்பணியிடங்களை நிரப்பும்வகையில் இமையத்தை துணைத் தலைவராகவும், செ. செல்வகுமார் (கோயம்புத்தூர் மாவட்டம்), சு.ஆனந்தராஜா (தஞ்சாவூர்மாவட்டம்), மு.பொன்தோஸ் (நீலகிரி மாவட்டம்) மற்றும் பொ. இளஞ்செழியன் (திருநெல்வேலி மாவட்டம்) ஆகியோர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.