• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி….ஸ்டாலின் ட்வீட்

Byமதி

Nov 19, 2021

சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிவித்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா விவசாயிகள் நாட்டின் தலைநகரான டில்லியின் எல்லையில் கடந்த ஓராண்டுகளாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்தனர்.

அவர்களின் போராட்டத்தின் பலனாக, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பிரதமரின் இந்த அறிவிப்பால் விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது, முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில், மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம். உழவர் பக்கம் நின்று போராடியதும், வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து, காந்தியின் மண் இந்தியா என்று உழவர்கள் உலகத்திற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.