• Mon. May 29th, 2023

வேளாண் சட்டங்கள் வாபஸ் – அரசியல் தலைவர்களின் கருத்துகள்

Byமதி

Nov 19, 2021

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, நாட்டிற்கே உணவளிப்பவர்கள் தங்களின் சத்தியாகிரகம் மூலம் ஆணவத்தை தலை குனியச் செய்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், ”பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் வெற்றி. இந்த போராட்டத்தில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறுகையில், ”வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவின் பொருள் பா.ஜ.க அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள். இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவு மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பா.ஜ.க அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் திவாஸ் அன்று மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. மூன்று சட்டங்களும் நீக்கப்படுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி, 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகம் என்றும் அழியாமல் இருக்கும். விவசாயிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை வரும் தலைமுறையினர் நினைவு கூர்வார்கள். விவசாயிகளுக்கு தலைவணங்குகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ”வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது நமது நாட்டுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இது சாதாரண வெற்றியல்ல, மக்களாட்சியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்த வெற்றி. மக்கள் குரலே மகேசன் குரல். நாம் இணைந்து போராடினால் நமது உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

குருநானக் ஜெயந்தி கொண்டாடும் இந்த வேளையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதை வரவேற்று நாடு முழுவதும் பொதுமக்களும், விவசாய சங்கத்தினரும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *