• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்து அமைச்சர் குழு அறிக்கை தாக்கல்

Byமதி

Nov 16, 2021

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.இதனால் தமிழ்நாடு முழுவதும் வெள்ளக்காடானது. கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

இது தொடர்பாக ஆய்வுசெய்து பயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர்சேத விவரங்களை அறியவும் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த 7 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவினர் கடந்த 12-ந்தேதி தஞ்சாவூர் சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள். மாவட்டத்தில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் எவ்வளவு ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்தது? அதில் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்ற விவரங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் விவாதித்தனர்.

அதன் பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி சேத விவரங்களை கேட்டனர். பின்னர் அவர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்களை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தனர். நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டது.

அமைச்சர்கள் குழு நடத்திய ஆய்வில் டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளை நிலங்களில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஆய்வுக்கு பிறகு அமைச்சர்கள் குழுவினர் கடந்த 2 நாட்களாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சேத மதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்தது. இதையடுத்து இன்று அமைச்சர்கள் குழுவினர் டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்த அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்தனர்.

இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு கடிதம் எழுத உள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை குறிப்பிட்டு நிவாரணம் கேட்க முடிவு செய்துள்ளார்.