• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இன்று இந்தியத் தொழில்துறையின் முன்னோடி ஜி.டி.பிர்லா நினைவு நாள்

ByKalamegam Viswanathan

Jun 11, 2023

ஜி.டி.பிர்லா (கன்சியாம் தாசு பிர்லா (Ghanshyam Das Birla- G.D. Birla) ஏப்ரல் 10, 1894ல் ராஜஸ்தான் மாநிலம் சூன்சூனு மாவட்டத்திலுள்ள பிலானி எனும் சிறுநகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் பிறந்தார். உள்ளூரிலேயே ஒரு ஆசிரியரிடம் எண் கணிதம் மற்றும் இந்தியில் ஆரம்பக் கல்வியை கற்றார். தந்தையும் வியாபாரி என்பதால் அவரது உதவியுடன் கல்கத்தா சென்று வியாபார உலகில் அடியெடுத்து வைத்த ஜி.டி.பிர்லா, அவரது குடும்ப தொழிலான தரகு வியாபாரம் செய்தார். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜி.டி.பிர்லாவால் தொடங்கப்பட்ட நவீன தொழில்கள்தான் இன்றும் பிர்லா குழுமங்களின் “கார்பொரேட்’ கம்பெனிகளாக ஆரோக்கியமாக வளர்ந்துள்ளன என்றால் மிகை அல்ல. கல்கத்தாவிலேயே நிரந்தரமாகத் தங்கி வங்காளத்தில் பெரிய அளவில் நடைபெற்றுவந்த சணல் தொழிலில் ஈடுபட்டார். சணல் தொழில் ஜி.டி. பிர்லாவுக்குக் கை கொடுத்தது. அவரது முன்னேற்றத்தை ஐரோப்பிய சணல் கம்பெனிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆங்கிலேய அரசின் மூலம், ஆங்கிலேய கம்பெனிகள் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கம்பெனிகளும் பிர்லாவுக்குத் தொல்லை கொடுத்தனர்.

விரைவிலேயே காற்று பிர்லாவுக்குச் சாதகமாக வீசத் தொடங்கியது. முதல் உலகப் போர் மூண்டது. இதன் தாக்கத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் ஜி.டி.பிர்லா. அதன் விளைவாக அவரது தொழில் அசுர வேகத்தில் வளர்ந்தது. உலகப் போர் முடிந்த பிறகு, 1919ல் ஐம்பது லட்சம் மூலதனத்துடன் பிர்லா சகோதரர்கள் லிமிடெட் என்கிற நிறுவனம் தொடங்கினார் ஜி.டி.பிர்லா. அதே ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலையைத் தொடங்கினார். இது பிற்காலத்தில் “ரயான்’ என்கிற “சிந்தடிக்’ ஆடைகள் பிரபலமடைய காரணமாக இருந்தது. 1926ம் ஆண்டில் ஜி.டி.பிர்லா பிரிட்டிஷ் இந்தியாவில் மத்திய சட்டசபையில் அங்கத்தினராகத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் நீண்டகாலம் பிரபலமாக இருந்த “அம்பாசிடர்’ கார்களை உற்பத்தி செய்த “இந்துஸ்தான் மோட்டார்ஸ்’ தொழிற்சாலையை 1952ல் நிறுவினார் ஜி.டி.பிர்லா.


தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த பிர்லா குழுமம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய கம்பெனிகளுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களையும், ஜவுளி ஆலைகளையும் விலைபேசி வாங்கியது. அது மட்டும் அல்லாமல் சிமெண்ட், ரசாயனம், ரயான், உருக்குக் குழாய்கள் என நவீன துறைகளில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியது பிர்லா குழுமம். 1942ல் “வெள்ளையனே வெளியேறு’ கோஷம் விண்ணை முட்டியது. போராட்டத்துக்குப் பிறகு, மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில், இந்திய மூலதனம், இந்திய மேலாண்மையைக் கொண்டு ஒரு புதிய வங்கியைத் தொடங்க வேண்டும் என்று எண்ணினார் ஜி.டி. பிர்லா. அதன் பயனாக 1943ல் கல்கத்தாவில் உருவானதுதான் யுனைடெட் கமர்ஷியல் வங்கி (யுகோ வங்கி). 1969ல் மற்ற பெரிய வஙகிகளைப் போல் இதுவும் தேசியமயமாக்கப்பட்டது.

பிலானியில் பிர்லா இன்ஸ்டிடூயுட் ஆஃப் டெக்னாலஜி 1964ல் தொடங்கினார். ஜி.டி.பிர்லா அதற்கு முன்பே 1943ல் ஜவுளி தொழில் நுட்ப மேம்பாட்டுக் கழகத்தை அவர் நிறுவியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. இவ்விரண்டு உயர் தொழில்நுட்பக் கழகங்கள் இன்று உலக அளவில் பேசப்படுகின்றன. இவை தவிர பல்வேறு நகரங்களிலும், சிற்றூர்களிலும், கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் பிர்லா நிர்வாகத்தினரால், இலவசக் கல்வி நிலையங்களாக நடத்தப்படுகின்றன. இலவசக் கல்வி தரும் 42 பள்ளிகளில் 45000 மாணவர்களுக்குத் தரமான இலவசக் கல்வி, 8500 மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் உயர்கல்விக்கு உதவித்தொகை, லட்சக்கணக்கான கிராமவாசிகளுக்கு 18 மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்ளிட்ட சமுதாய நலன்களுக்காகக் கணிசமான தொகையைத் தங்கள் லாபத்திலிருந்து ஒதுக்கீடு செய்திருக்கிறது இக்குழுமம்.

பிர்லாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் அவரது முடிவெடுக்கும் திறமை, வேகம். முடிவெடுத்தபின், உலகமே எதிர்த்து நின்றாலும், முன் வைத்த காலை பின் வைக்கமாட்டார். மார்வாரி குடும்பங்களில், வயதில் மூத்தவர்களை மதிப்பதும், அவர்கள் சொல்லைத் தட்டாமல் நடப்பதும் பாரம்பரியம். குடும்பத் தொழிலான தரகு வியாபாரத்தை விட்டு, தொழிற்சாலை ஆரம்பிக்க பிர்லா திட்டமிட்டபோது, ஒட்டுமொத்தக் குடும்பமும் அவரை எதிர்த்தது, குறிப்பாக, இளமைக் காலத்தில் அவருக்கு பிசினஸ் வழிகாட்டியாக இருந்த அண்ணன் ஜூகல் கிஷோரும் எதிர்த்தார். ஆனால், பிர்லா தன் பாதையில் தொடரத் தயங்கவேயில்லை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் தொழில்துறையில் எதிர்த்த பிர்லா, சமூகத்திலும் ஒரு போராளிதான். 1925ல், அவருடைய மூத்த அண்ணனின் மனைவி காலமானார். இரண்டு சின்னக் குழந்தைகள். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மார்வாரிப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்தார்கள். பிர்லா குடும்பம் ராஜஸ்தான் மார்வாரிகள். தங்களை உயர்ந்த ஜாதியாக நினைப்பவர்கள். உத்தரப் பிரதேச மார்வாரிக் குடும்பங்களில் பெண் எடுக்கமாட்டார்கள். ஆகவே, மார்வாரிகள் சங்கம் திருமணத்துக்குத் தடை விதித்தது. இதையும் மீறிக் கல்யாணம் நடந்தது. பிர்லா குடும்பத்தை, தங்கள் சமூகத்திலிருந்து சங்கத்தினர் ஒதுக்கிவைத்தார்கள். அவர்களோடு பிசினஸ் செய்வதை நிறுத்தினார்கள். சுமார் 5 லட்சம் அவதூறு நோட்டீஸ்களை விநியோகித்தார்கள். மார்வாரிக் குடும்பங்களுக்குள் அபார ஒற்றுமை உண்டு. தனி வாழ்க்கையிலும், பிசினஸிலும் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்வது வாடிக்கை. இதனால், சங்கத்தின் கட்டளைகளை யாருமே மீற மாட்டார்கள். பணிந்து போவார்கள். பிர்லா பயப்படவேயில்லை. எதிர்கொண்டார். மார்வாரி இனமே இரண்டாகப் பிளவுபட்டது. பிர்லாவின் பிசினஸும் பாதிக்கப்பட்டது. ஆனாலும், பிர்லா தன் கொள்கை சரியென்று உறுதியோடு நின்றார்.

காந்திஜியோடு பிர்லாவுக்கு இருந்த நட்பிலும், இதே அணுகுமுறைதான். மகாத்மாவுக்கு ஏராளமான தொண்டர்கள் உண்டு. ஆனால், அவரோடு சரிசமமாகப் பழகும் நண்பர்கள் ஒரு சிலர்தாம். அவர்களுள் பிர்லா முக்கியமானவர். இதனால்தான், பிர்லாவும், தன் சுயசரிதைக்கு மகாத்மாவின் நிழலில் என்றும் ஜிடி தலைப்பு வைத்திருக்கிறார். டெல்லி வரும்போதெல்லாம், காந்திஜி பிர்லா ஹவுஸ் எனப்படும், பிர்லாவின் வீட்டில்தான் தங்குவார். வாழ்க்கையின் இறுதி 144 நாட்கள் மகாத்மா தங்கியது இங்கேதான். அவர் படுகொலை செய்யப்பட்டதும் இந்த வளாகத்தில்தான். இந்தக் கட்டடம் இன்று காந்திஜி நினைவு அருங்காட்சியகமாக இருக்கிறது. ஆகவே, தொழில் முன்னோடி என்பதையும் தாண்டி, பாரத வரலாற்றில் பிர்லாவுக்குத் தனி இடம் உண்டு.

இந்த நெருக்கத்திலும், காந்திஜியின் கருத்துகளோடு பகிரங்கமாக மாறுபட பிர்லா தயங்கியதேயில்லை. காந்திஜியோடு காரசாரமாக விவாதிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. குடிசைத் தொழில்கள் மட்டுமே இந்தியாவுக்கு விமோசனம் என்று காந்திஜி நினைத்தார். கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் காண முடியும் என்பது பிர்லாவின் உறுதியான நம்பிக்கை. காந்திஜிக்காக பிர்லா தன் கொள்கையைத் தளர்த்திக்கொள்ளவில்லை. காந்திஜியும், இதைத் தவறாக நினைக்கவில்லை. பிர்லா இரண்டு முக்கிய நிர்வாகக் கொள்கைகளை வைத்திருந்தார். குழுமத்தின் வெற்றிக்கும், அவர் நிறுவிய நிறுவனங்கள் நிலைத்து நிற்பதற்கும், இந்தக் கொள்கைகள் முக்கிய காரணம். ஆரம்ப காலங்களில் நஷ்டத்தில் ஓடிய பல பஞ்சாலைகளை வாங்கினார். நிர்வாகத்தை மேம்படுத்தி, அவற்றை லாபப் பாதைக்குக் கொண்டுவந்தார். ஆனால், பல தொழிலாளர் பிரச்சினைகள் வந்தன. இந்த அனுபவத்தால், பின்னாட்களில், அவரது அணுகுமுறை தலைகீழாக மாறியது. 1950க்கு பின் வந்த ஒவ்வொரு தொழிற்சாலையும், புதிதாக நிறுவப்பட்டதுதான்.

அனுபவசாலிகளை அதிகச் சம்பளத்தில் எடுப்பதைவிட, புதியவர்களைக் குறைவான சம்பளத்தில் எடுத்து, நம் தொழிலில் பயிற்சி தந்தால், அவர்கள் அதிக அர்ப்பணிப்போடு வேலை செய்வார்கள். கீழ்நிலையில் வேலைக்குச் சேர்ந்த பலர் சி.இ.ஓ க்களாக உயர்ந்தார்கள், பிர்லா நிறுவனங்களை அற்புதமாக நடத்தினார்கள். பிர்லாவின் நிர்வாகக் கொள்கைக்குக் கிடைத்த அங்கீகார முத்திரை. பிர்லா குழுமம் ஒரு மேனேஜ்மென்ட் ஸ்கூல் மாதிரி, திறமைசாலிகளைப் பட்டை தீட்டியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பிர்லாவிடம் நிறைய உண்டு. பிர்லா தன் நேரத்தை பணத்தைவிடச் சிக்கனமாகச் செலவிடுவார். இவருடைய அன்றாட வாழ்க்கை எப்படித் தெரியுமா?

காலை 4.30 மணிக்குக் கண் விழிப்பு. காலைக் கடன்களை முடித்து நடக்கப் போகும்போது கடிகாரம் சரியாக 4.45 காட்டும். இரண்டு மணிநேர நடை. 6.45க்குத் திரும்பி வந்து 45 நிமிடங்கள் பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் படிப்பார். பகவத் கீதை சுலோகங்கள் சொல்லுவார். பிறகு குளியல். தியானம். பழங்கள், காய்கறிகள் எனச் சிற்றுண்டி. குடும்பத்தோடு 30 நிமிடங்கள். அவர்களோடு பொது விவகாரங்கள் பேசுவார். ஒரு மணி நேரம் பத்திரிகைகள், அலுவலகப் பேப்பர்கள் படிப்பார். தம் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அன்றைய நிலவரங்களை அறிந்துகொள்வார். பத்து மணிக்கு ஆபீஸ். சுறுசுறுப்பாக வேலை. 12.30க்கு அதிகாரிகளோடு மதிய உணவு. பின் மூன்று மணி நேரம் அலுவலகத்தில் வேலை. வீட்டுக்கு வந்து ஓய்வெடுப்பார். மாலை ஆறு முதல் ஏழு வரை நடை. 7.30க்கு இரவு உணவு. அப்போது வீட்டின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து சாப்பிட்டாக வேண்டும். 8.30க்குப் படுக்கையறைக்குப் போய்ப் புத்தகங்கள் படிப்பார். 9மணிக்குத் தூங்கிவிடுவார். எந்த வெளி நிகழ்ச்சிகளுக்காகவும் தன் நேர அட்டவணையை மாற்றிக்கொள்ளமாட்டார்.

வாழ்நாள் முழுவதும் ராணுவத் தனமான இந்தக் கட்டுப்பாட்டை பிர்லா கடைப்பிடித்தார். ஒரே ஒர் நாள் மட்டும்தான் இந்த நெறிமுறையை அவர் விடவேண்டி வந்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவருக்கு இரவு விருந்து அளித்தார். அதில் கலந்துகொண்ட பிர்லா அன்று மட்டும், தன் இரவு உணவு நேரத்தையும், தூங்கும் நேரத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது. நேரத்தில் மட்டுமல்ல, பணத்திலும் பிர்லா படு சிக்கனம்தான். தன் மகன் பசந்த்குமாருக்கு அவர் அடிக்கடி தந்த அறிவுரை, ‘அதிகம் செலவிடாதே. பணத்தைக் கேளிக்கைகளில் வீணாக்காதே.

பிர்லாவின் பேரன் ஆதித்ய பிர்லா அமெரிக்கா எம்.ஐ.டி இல் படிக்கப் போனார். அப்போது பிர்லா பேரனுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு பகுதி: சைவ உணவு மட்டுமே சாப்பிடு. ஒருபோதும் மது அருந்தாதே, புகை பிடிக்காதே. அதிகாலையில் எழுந்திரு. சீக்கிரம் தூங்கப் போ. இளவயதில் திருமணம் செய்துகொள். அறையை விட்டு வெளியே போகும்போது, மறக்காமல் விளக்கை அணைத்துவிட்டுப் போ. நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடி. தினமும் நடைப் பயிற்சி மேற்கொள். குடும்பத்தோடு எப்போதும் தொடர்பில் இரு. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆடம்பரச் செலவு செய்யாதே. இந்தியாவின் மாபெரும் பணக்காரரின் வார்த்தைகள் இவை என்றால் நம்ப முடிகிறதா?

சில பிர்லாவின் வைரவரிகள், தவறு செய்துவிட்டீர்களா? அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டீர்களானால், அந்தத் தவறு ஒரு வரம், இல்லையென்றால்? அது சாபம். நாளைக்குச் செய்யவேண்டிய காரியங்களை இன்றே செய்யுங்கள். இன்று செய்யவேண்டிய காரியங்களை இப்போதே செய்யுங்கள். சீக்கிரம் தூங்குங்கள். அதிகாலை எழுந்திருங்கள். செல்வத்தையும், அறிவையும் வளர்க்கும் வழி இது. தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கிறவன் ஒன்றுமே தெரியாதவன். வாழ்க்கை ஒரு பாற்கடல். கடையக் கடையத்தான், அதிக வெண்ணெய் கிடைக்கும். ஜி.டி.பிர்லா என்று அறியப்படும் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா ஜூன் 11, 1983ல் தனது 89வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.