• Tue. Sep 26th, 2023

பிஞ்சுக் குழந்தைகளை வெம்பச் செய்யலாமா?- குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12).

ByKalamegam Viswanathan

Jun 12, 2023

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 10, 2006 முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வோர் உயிருக்கும் பல உரிமைகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது கல்வி கற்கும் உரிமை. ஆனால், சிறு வயதிலேயே அவர்களை பணிக்கு அனுப்பி, அவர்களது கல்வி உரிமையைப் பறிப்பது ஏற்கமுடியாத செயல். குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதைக் கண்டித்து உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது ஐக்கிய நாடுகள் சபை. இந்தியாவைப் பொறுத்தவரை, 1986ல் குழந்தைத் தொழிலாளர் முறை தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, 1987ல் அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும், குழந்தைத் தொழிலாளர் கணக்கெடுப்புப் பணிகளும் தொடங்கின. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டாசுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, மாநிலத்திலேயே முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 1995ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத் தலைவருமான கு.ராசாமணி கூறும்போது, “கோவை மாவட்டத்தில் செங்கல் சூளை, பஞ்சாலைகள், வாகன பட்டறைகள், ஜவுளி ஆலைகள் மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர். பல்வேறு துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, தொடர் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவதும், மீட்கப்பட்ட அத்தனை பேருக்கும் மறுவாழ்வு அளிப்பதையுமே லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம். இன்னும் இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, திட்டத்தின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.

பொதுமக்கள் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இணைய தளத்தில் (www.pencil.gov.in) புகார் பதிவு செய்தால், அடுத்த 48 மணி நேரத்தில் குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் கூறும்போது, “கண்டறியப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் முதல்கட்டமாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். குழந்தைத் தொழிலின் அவலம், கல்வியின் முக்கியத்துவம், படிப்பதால் ஏற்படும் நன்மைகள், எதிர்காலம் குறித்தெல்லாம் விளக்குகிறோம். பின்னர் அவர்களை சிறப்புப் பயிற்சி மையத்தில் சேர்த்து, கல்வி கற்பிப்பதுடன், திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்கிறோம். பயிற்சி மையப் படிப்புக்குப் பின்னர், முறைசார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட பிறகும், அவர்கள் இடைநின்றுவிடாமல் படிக்கிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.

மேலும், மேல்நிலைக் கல்வி முடித்த பின், கல்லூரிக் கல்வி பயில ஆலோசனை வழங்குவதுடன், கல்லூரியில் சேர உதவிகளும் செய்கிறோம். அவர்களுக்கு அரசு வழங்கும் ரூ.6,000 நிதியுதவி பெற்றுத் தருவது, படிப்பு முடித்த பின், தொழில் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி, முடிந்தவரை வேலையில் சேரவும் உதவுகிறோம். அவர்களது பொருளாதாரத்தை உயர்த்தவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் இயன்ற உதவிகளை செய்கிறோம்” என்றார்.


குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.
• உடல் ரீதியான பாதிப்பு
• உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்
• உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு
கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்
• சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .
• சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்


• கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
• பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.


• “குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல” என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
Source By: Wikipedia and Hindutamil.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *