• Mon. Apr 29th, 2024

விண்வெளியில் ஷூட்டிங்யை முடித்த ரஷிய படக்குழு…

Byமதி

Oct 19, 2021

விண்வெளி ஆராய்ச்சியில் நாசாவுக்கு கடும் போட்டியாக விளங்குவது ரஷியாவின் ராஸ்கோமாஸ் நிறுவனம்தான்.

நாசா நடிகர் டாம் குரூசை வைத்து, விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால் அதன் பின்னர் அந்த படம் குறித்து வேறு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.‌ அதேவேளையில் ரஷியா விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் முழு மூச்சில் இறங்கியது.

அதன்படி ரஷியாவின் ராஸ்கோமாஸ் நிறுவனம், விண்வெளியில் எடுக்கப்படும் முதல் திரைப்படத்தின் பெயர் மற்றும் திரைப்பட குழுவை கடந்த மே மாதம் அறிவித்தது. ‘சேலஞ்ச்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை பிரபல இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்குவார் என்றும், நாயகியாக யுலியா பெரெசில்ட் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

புவிஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் விண்வெளி வீரர் ஒருவருக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், பெண் மருத்துவர் ஒருவர் விண்வெளிக்கு சென்று இந்த சவாலான பணியை எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் என்பதே படத்தின் மையக்கரு ஆகும்.

இந்த நிலையில் ‘சவால்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கடந்த 5-ந் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து ‘சோயுஸ் எம்.எஸ்-19’ விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த குழு திட்டமிட்டபடி 12 நாட்களில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகிய 3 பேரும் ‘சோயுஸ் எம்.எஸ்-19’ விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டு, வெற்றிகரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் மலர் கொத்துகளை கொடுத்து 3 பேரையும் வரவேற்றனர்.

இதன் மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுத்த உலகின் முதல் நாடாக ரஷியா வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *