• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்

ByKalamegam Viswanathan

Jun 5, 2023

பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) இன்று (ஜூன் 5).

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும், வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒவ்வோராண்டும் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கும் ஒரு தனியான முழக்கத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட்டது. இந்த முழக்கங்களைப்போலவே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு கருப்பொருளும் உண்டு.

இந்த 21-ம் நூற்றாண்டில் காலநிலை மாற்றம் என்பது நம்மை மிகவும் அச்சுறுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. காலநிலை மாற்றம் என்பது மக்களின் குடியேற்றம், மாறிவரும் உணவு முறை, புதிதாக கட்டியெழுப்பபடும் கட்டடங்கள், நகரங்கள் அதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல இடங்களில், வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு ஏற்கனவே அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் மனிதனுடைய நலனும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முக்கியமான காரணி, காற்று, உயிரியல் பாதுகாப்பு, வேதியியல் மற்றும் அதன் கழிவுகள், காலநிலை மாற்றம், பேரழிவுகள், போன்ற அனைத்து அம்சங்களிலும் மனிதர்களின் பங்கு பொதுவான காரணியாக உள்ளது. அதனால் அவர்கள் எரிபொருள்களை எரிப்பதை குறைக்க வேண்டும். காடுகளை அழிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். அதிகமான மரங்கள் மற்றும் செடிகளை நட வேண்டும். காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். மேலும் இயற்கை வளங்களை சிறப்பாக பயன்படுத்துவது என நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 2030ம் ஆண்டில் 670 மில்லியன் மக்கள் மாசுப்பட்ட காற்றை சுவாசிப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகில் தற்போது காற்று மாசுபாட்டின் நிலைமை மிக மோசமாக உள்ளது. உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் ஆபத்தில் உள்ளது. பூமி வெப்பமயமாதலால் சுற்றுச்சூழலில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை என்றால் இயற்கையின் முடிவுகள் மிகவும் மோசமாக இருக்கும். ஒரு புள்ளி விவரகணக்கின்படி, உலகளவில் 93 சவீதம் மக்கள் காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசித்து வருகின்றனர். காற்று மாசுபாட்டால் உலகில் ஆண்டுக்கு 70லட்சம் பேர் இறக்கின்றனர். உலகிலேயே மிகவும் மாசு அடைந்த நாடாக இந்தியா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 12 லட்சம் பேர் காற்று மாசுபட்டால் உயிரிழந்து வருகின்றனர்.

எந்த மனிதனும் திட்டம் போட்டு பூமியை உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. தினம் தினம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கை பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் ஒரு தொடக்கமாகத்தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அன்றாடம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவி இனங்கள் இன்று முற்றிலும் காணாமல் போனது. 2050 ஆம் ஆண்டிற்குள் ஐம்பது சதவீத உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்ளும் என்ற தகவல் மிகவும் வேதனையாக உள்ளது.

உயிரினங்கள் அழிவின் விளிம்பில் நிற்க பூமி வெப்பமயமாகுவதும் ஓர் முக்கிய காரணமாகும். வேகமாக உருகி வரும் பனி பாறைகள் பல்வேறு பனிக்கரடிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. மேலும் அதிக வெப்பமானது கடல் வாழ் உயிரினங்களை இன பெருக்கத்திலிருந்தும் தடுக்கிறது. உலகில் ஒவ்வொரு நாளும் 700-க்கும் மேற்பட்ட சிறார்கள் உயிரிழந்து வருவதாகவும், ஒரு வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே எழுபது லட்சம் குழந்தைகள், தீவிர மாசு நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், உலகம் முழுவதும் சுமார் பத்து லட்சம் குழந்தைகள், பிறந்த அன்றே உயிரிழப்பதாக ஐ.நாவின் குழந்தை நல நிறுவனம் யூனிசெஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒரு ஆராய்ச்சியின்போது, “தேனீக்கள் என்று அழிகிறதோ அன்று உலகமும் அழிந்துபோகும்” என்று மேற்கோள்காட்டி கூறியுள்ளார். அதிகமான பூச்சி கொல்லி உபயோகம் மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களை கொல்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தேனீக்கள் அழிந்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். இந்நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் மனிதனும் அழியும் மிருகங்கள் பட்டியலில் நிச்சயம் சேர்ந்துவிடுவான் என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது. முடிந்தவரை காற்று மாசை தடுத்து, அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி, இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே மனிதனால் தன் அடுத்த தலைமுறைக்கு தன் முன்னோரும் தானும் அனுபவித்த இயற்கை வளங்களை பரிசாய் தரமுடியும். இல்லையேல் இனிவரும் தலைமுறைகள் புலியையும், யானையையும், ஏன் மழையை கூட புகைப்படத்தில்தான் காண இயலும். எனவே, முடிந்த வரை மரங்கள் நடுவோம். மழை, மன்வளம் பெறுவோம்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.