• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்று உலக பூமி நாள் ..நாம் வாழும் பூமியை பாதுகாப்போம்..

ByKalamegam Viswanathan

Apr 22, 2023

அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடம் பூமி, மனிதனுக்குக் கொடுத்துள்ள வளங்கள் ஏராளம், அத‌ற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம்? – உலக பூமி நாள் இன்று (Earth Day) (ஏப்ரல் 22).

பூமி (புவி) நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

1969 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமாகிய கலிபோர்னியாவின் சாந்தா பார்பரா நகர் அருகே நிகழ்ந்த பெரும் எண்ணெய்க்கசிவைப் பார்வையிட்ட விஸ்கான்சின் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன். 1970 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் சுற்றுச்சூழல் குறித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறுமென வாஷிங்டனின், சியாட்டிலில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அறிவித்தார். கேலார்ட் நெல்சன் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது. அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் பூமி (புவி) நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் பற்றிய குழு விவாதப்பொருளில் கல்லூரி மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று எண்ணி இந்த நாளை மேலவை உறுப்பினர் நெல்சன் தேர்ந்தெடுத்தார். இதற்கு ஏப்ரல் 19-25 தேதி வரையிலான நாட்களே சிறந்ததென அவர் முடிவு செய்தார். இந்த நாள் ஐக்கிய அமெரிக்காவில் தேர்வு காலத்தின்போதோ வசந்த கால விடுமுறையிலோ வரவில்லை. அத்துடன் மத சம்பந்தப்பட்ட உயிர்ப்பு விழா அல்லது யூத பாஸ்கா விழா போன்ற விடுமுறை நாட்களிலும் வரவில்லை. இது வசந்த காலத்தில் வசதியான காலநிலையில் வரும் நாளாகவும் உள்ளது. வகுப்பில் அதிக அளவு மாணவர்கள் இருக்கக்கூடும், எனவே வாரத்தின் மத்தியில் மற்ற நிகழ்ச்சிகளுடன் குறைவான போட்டியே இருக்கும் என்ற காரணத்தினாலே, ஏப்ரல் 22 ஆம் தேதி புதன் கிழமையை அவர் தேர்ந்தெடுத்தார்.

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான எட்டி ஆல்பர்ட் என்பவர் புவி நாளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். இப்போது வரை நடக்கும் இந்த வருடாந்திரச் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள்குறித்த பணிகளை 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறப்பாக மேற்கொண்ட ஆல்பர்ட்டின் பணி சிறப்பானது என்றாலும், புவி நாள் ஆல்பர்ட்டின் பிறந்த நாளான ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது ஒரு தரப்பினரின் கூற்றாகும். அந்தக் கால கட்டத்தில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மீது அளவு கடந்த தாக்கத்தை ஏற்படுத்திய கிரீன் ஏக்கர்ஸ் என்ற தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆல்பர்ட் இன்றளவும் சிறப்பான முறையில் அறியப்படுகிறார்.

ரான் கோப் (Ron Cobb) என்னும் கருத்துப்பட ஓவியர் சுற்றுச்சூழல் குறித்த குறியீடு ஒன்றை உருவாக்கினார். அது பின்னர் புவி நாள் குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் அது மக்களின் பொதுச் சொத்தாகவும் அறிவிக்கப்பட்டது. அந்தக் குறியீடு முறையே “Environment” மற்றும் “Organism” என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட “E” மற்றும் “O” எழுத்துகளின் ஒருங்கிணைப்பாகும். கிரேக்க மொழியின் எட்டாம் எழுத்தாகிய ” தீட்டா” (Theta -“θ”) சாவு போன்ற பேரிடரைக் குறிக்கும் எச்சரிக்கை அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1970 ஏப்ரல் 21ல், “லுக்” பத்திரிகை தனது இதழில் அந்தக் குறியீட்டை ஒரு கொடியுடன் இணைத்து வெளியிட்டது. பச்சை, வெள்ளை என்று மாறி மாறி 13 வண்ணப்பட்டைகளுடன் காணப்பட்ட அந்தக் கொடி அமெரிக்க கொடியைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கக் கொடியில் காணப்படும் நட்சத்திரங்களுக்குப் பதிலாகப் பச்சை நிறத்தில் சுற்றுச்சூழல் குறித்த குறியீட்டுடன் இக்கொடி காணப்பட்டது.

1969 ஆம் ஆண்டு விளம்பர வாசக எழுத்தாளரான ஜுலியன் கேனிக் (Julian Koenig) என்பவர் அமெரிக்க மேலவை உறுப்பினர் நெல்சனின் அமைப்புக் குழுவில் இருந்ததுடன், இந்த நிகழ்விற்குப் “புவி நாள்” என்று பெயரிட்டார். இந்தப் புதிய நிகழ்வைக் கொண்டாடத் தேர்ந்தெடுப்பட்ட நாள் ஏப்ரல் 22 என்பதுடன், அது கேனிக்கின் பிறந்த நாளாகவும் அமைந்தது. “பெர்த் டே” என்கிற சந்தம் அமைந்ததால் “எர்த் டே” என்று பெயரிடுவது எளிதாக இருந்ததாக அவர் கூறினார். அனைத்து உயிரினங்களையும் தன்னுள்ளே வைத்து, பொத்தி பொத்தி பாதுகாக்கும் பூமியை நாம் எவ்வாறு பயன்படுத்துவது, அதன் வளங்களை பாதுகாப்பது என யோசித்து, பூமிக்கான தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெறுவது வழக்கம். புவி வெப்பம் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளதோடு, பல நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நாளில், இயற்கை வளத்தைப் பாதுகாத்து, பூமியின் நலனை பாதுகாக்க நாம் உறுதியேற்க வேண்டும். அதற்கு, மாற்று எரிசக்திகளை பயன்படுத்தத் தொடங்கவேண்டும். பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களில் இருந்து விடுபட்டு, காற்று, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை நாம் பயன்படுத்த வேண்டும். மின்சாரம், குடிநீர் சேமிப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையில் முறையான கட்டுப்பாடுகள் நமக்குத் தேவை. அப்போதுதான், இருக்கும் வளங்களையாவது நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். காட்டை அழிப்பது, வன உயிரினங்களை வேட்டையாடுவது உள்ளிட்ட செயல்களும் நிறுத்தப்பட வேண்டும்.

மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின. ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதற்கு வழி ஏற்பட்டது. இக்காலகட்டங்களில் புவியின் பௌதிகத் தன்மையினாலும் புவி சூரியனைச் சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. உயிர்களுக்கு ஏதுவான தற்போதுள்ள சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வுத் தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பூமி சூரியனைச் சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக 365.2564 நாட்களில் (150 மில்லியன் கி.மீ) ஒரு ஆண்டை கடக்கின்றது. இதனால் சூரியன், நட்சத்திரங்களை ஒப்பிடுகையில் கிழக்கு நோக்கி நாளொன்றுக்கு 1° நகர்வதாக மற்றும் சூரியன் அல்லது சந்திரன் விட்டத்தை 12 மணி நேரத்தில் கடப்பதாகத் தோன்றுகிறது. இந்தச் செயலால் சராசரியாக ஒரு நாள் 24 மணி நேரத்தில் பூமி தன் அச்சிலேயே ஒருமுறை சுழன்று அதன் ஆரம்ப நிலை வந்தடைகின்றது. பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ) வேகத்தில் சுழல்கிறது. இது பூமியின் விட்டத்தை (ஏறத்தாழ 12,600 கி.மீ) ஏழு நிமிடங்களிலும், சந்திரனுக்கு செல்லும் தூரத்தை (384,000 கி.மீ.) நான்கு மணி நேரத்திலும் கடக்க ஏதுவான வேகமாகும். சந்திரன் பூமியுடன் சேர்ந்து விண்மீன்களை ஒப்பிடுகையில் 27.32 நாட்களில் சுழன்று வருகிறது. சூரியனைச் சுற்றி, பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பொதுவான சுழற்சியைச் சேர்த்தால், சைனோடிக் மாத காலமாகும், பௌர்ணமியிலிருந்து பௌர்ணமி வரை 29.53 நாட்களாகும்.

புவிக் கோள்பாதை மாற்றங்கள் மூன்று விதமானவை, புவியின் மைய உறழ்வு, புவியின் சுழற்சி அச்சு சாய்மானக் கோணத்திலான மாற்றங்கள் மற்றும் புவியச்சின் முந்துகை. இவை அனைத்தும் இணைகையில் இவை மிலாங்கோவிச் சுழற்சிகள் என்பவனவற்றை உருவாக்குகின்றன. இது தட்பவெப்ப நிலையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பனியாறாக்கம் மற்றும் பனியாறு இடைக்காலம் ஆகியவற்றுடன் குறிப்பிடும் அளவில் தொடர்பு இருக்கிறது. புவியமைப்புப் பதிவியின்படி சஹாராவின் தோற்றம் மற்றும் அதன் முன்னடைவு மற்றும் பின்னடைவு ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அறியப்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள `டீ’ தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்று ஒரு இலாக்கா இருக்கிறது. ஒரு துறை இருக்கிறது. காட்டை பாதுகாப்பதற்காகவே பணமெல்லாம் செலவழிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு மந்திரிகள் எல்லாம் கூட வருகிறார்கள். ஆனாலும் அழிக்கப்படும் காடுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இதன் மூலம் உண்டான விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று, நமக்கு உணவளிக்கிறது, நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு, நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக, அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.

இன்றுள்ள நிலையில் இமயமலையே உருகி ஓடி வந்து கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றிற்கும் காவிரி ஆற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடை காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக் கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக் கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னை பாதி இல்லாமல் போய்விடும். கடலூர் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும்.

பூமி என்பது மனிதனுக்குக் கொடுத்துள்ள வளங்கள் ஏராளம். அவற்றை முறையான திட்டமிடலுடன் சுயநோக்கம் இன்றி பயன்படுத்த வேண்டும். அதேபோன்று, மற்ற உயிரினங்களையும் சுதந்திரமாக வாழ, மனிதன் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான், பூமியின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும். மனித சந்ததிகளும் மகிழ்ச்சியாக வாழ முடியும். புவியில் இருந்து எவ்வளவு பெற்றிருக்கிறோம், இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அத‌ற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம்? வாகனப் புகையையும், தொழிற்சாலைக் கழிவுகளையும், ப்ளாஸ்டிக் குப்பைகளையும், பொது இட அசுத்துங்களும் தானே அதிகம் கொடுத்திருக்கிறோம். நல்லதைப் பெற்று தீயதைக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.’கிவ் அன்ட் டேக்’ பாலிசி என்று சின்ன‌ குழ‌ந்தை முத‌ல் க‌ல்யாண‌ம் முடித்த‌ இள‌ம் த‌ம்ப‌தியின‌ர் வ‌ரை அறிவுறுத்தி வ‌ள‌ர்க்கும் நாம், புவியைப் ப‌ற்றி இன்று வ‌ரை சிந்திக்காவிட்டாலும், இனிமேலாவ‌து சிந்திப்போமே. ந‌ம‌து அடுத்த‌ த‌லைமுறைக்கு இவ்வித்தை விதைத்துச் செல்வோம்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.