• Tue. Apr 30th, 2024

தமிழ் மந்திரங்கள் ஒலிக்க பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்

ByA.Tamilselvan

Jan 27, 2023

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனிகோயிலில் 16 ஆண்டுகளுக்குபிறகு ஆரோகரா கோஷம் முழங்க தமிழில் மந்திரங்கள் ஒலிக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படுவது திருஆவினன் குடி எனப்படும் பழனி. இந்த ஆலயத்தில் தினசரியும் முருகனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. 23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. நேற்றைய தினம் மலைக்கோவில் மூலவர், ராஜகோபுரம், தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இன்று அதிகாலை 8ஆம் கால யாக பூஜைகள் தொடங்கின. இந்த பூஜைகள் நிறைவடைந்து, கோபுர கலசங்கள் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வானத்தில் கருடன் வட்டமிட்ட உடன் சிவாச்சாரியார்கள் பச்சைக்கொடி அசைக்க 9 மணிக்கு ராஜகோபுரம், தங்க விமானத்தில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரத்தில் தென்மண்டல ஐஜி தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்த உடன் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கும்பாபிஷேகத்தை காண காத்திருந்த பக்தர்கள் மீது 8 இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரத்தில் 3 இடங்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *