ஒய்.ஜி மகேந்திரன் புதிதாய் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள “சாருகேசி” திரைப்படம் குறித்த அறிவிப்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று மாலைநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நடிகர் கலந்துகொண்டார்அப்போது ரஜினிகாந்த் பேசும் போது, 1975-ல் அபூர்வராகங்கள் படத்தில் நடித்திருந்தேன். அப்போது கண்ண தாசன் அவர்களின் மகனான கண்மணி சுப்பு அவரிடம் வெளியே எங்கயாவது ஷூட்டிங் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தேன்.
அதற்கு அவர் மயிலாப்பூர் கல்யாண மண்டபத்தில் ‘ரகசியம் பரம ரகசியம்’ நாடகத்தை நடத்துகிறோம். சுந்தர்ராஜன், ஜெய் சுதா ஆகியோர் நடிக்கிறார்கள். அங்கு வாருங்கள் என்று கூறி அவர் என்னை அங்கு வரவழைத்தார். உடனே நான் அங்கு சென்றேன். நான் செருப்பு போட்டு இருந்ததை பார்த்து, என்னை வெளியே இருந்தவர்கள் உள்ளே விட வில்லை.அரை மணிநேரம் காத்திருந்தேன். என்னை அவர்கள் உள்ளே விடவே வில்லை. அதன்பின்னர் அபூர்வராகங்கள் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் என்னை பார்த்து என்ன சிவாஜி.
இங்கே நிற்கிறீர்கள் என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே சென்று பார்த்தால் நீள முடிவைத்த வாட்டசாட்டமான ஒருவர் பாலசந்தர் சாரையே டேய் பாலு.. அங்க பாரு,. இங்க பாரு என்று பேசிக்கொண்டிருந்தார்.
எனக்கு பாலச்சந்தர் சாரையே யார் இப்படி கூப்பிடுகிறார் என்று ஆச்சரியம். அதன்பின்னர் லட்சணமாக ஒரு பெண் வந்தார். யாரென்று பார்த்தால் அதுதான் Y.G.பார்த்தசாரதின் மனைவி.. அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் அவ்வளவு அழகாக இருக்கும். அப்போதுதான் நான் நாடகத்திற்காக அவர்கள் எடுக்கும் பயிற்சியை நான் பார்த்தேன். அதன் பின்னர் அவர் குடும்பத்தில் ஒருவனாகி, 45 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு சிறப்பு விருந்தினராக இங்கு உட்கார்ந்து இருக்கிறேன் என்றால், இது காலத்தின் விளையாட்டு. இந்தக்காலம் யாரை எப்போது மேலே கொண்டு போகும், எப்போது கீழே இறக்கும் என்று தெரியாது.ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க 45 வருடத்திற்கு முன்பு உள்ளே சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் சாருகேசி நாடகத்தின் 50வது நாள் விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் செயல். ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் YGP நாடகக்குழுவில் இருந்து வந்தவர்கள். பாதுகாப்பும் கண்ணியமுமிக்க நாடக குழுவினராக திகழ்ந்தனர். சினிமாவிலும், நாடகத்திலும் கதை திரைக்கதை மிகவும் முக்கியம். படித்தவர்களும் பட்டதாரிகளும் பல துறை வல்லுனர்களும் YGP நாடக குழுவில் இருந்தனர்.சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்திருப்பார். சிவாஜி கணேசனின் “வியட்நாம் வீடு” போன்று இருந்தது. ஒய்.ஜி மகேந்திரனுக்கு சினிமாவைவிட நாடகம்தான் முக்கியம்.
எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்கிற முறையில், ஒய்.ஜி மகேந்திரனுக்கு நான் கடன்பட்டுள்ளேன். நடத்துனராக இருக்கும்போது தினமும் குடிப்பேன், சிகரெட் குடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும். பெயரும்புகழும் வந்த பின் எப்படி இருந்திருப்பேன் இதை அளவுக்கு மீறி அதிகம் எடுத்தவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்தது இல்லை. இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.என்னை அன்பால் ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தவர் என் மனைவி மது, புகைபிடிக்கும் பழக்கம், அசைவ பழக்கம் போன்றவை ஒரு காலத்தில் என்னோடு ஒட்டி இருந்தது. அதை மாற்றியவர் எனது மனைவி தான் அதற்கு காரணமான ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நன்றி என்றார்