திருவண்ணாமலையில் நாளை மகாதீபத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தீபத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், “திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 13ஃ12ஃ2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும் 15ஃ12ஃ2024 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் இன்று டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் கும்பகோணம் மயிலாடுதுறை நாகப்பட்டினம். திருச்சி கரூர், காரைக்குடி இராமேஸ்வரம் புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 850 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பிவருவதற்கு வசதியாக சிற்றுந்துகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstcin என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மொபைல் ஆப் கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமம் இன்றி பயணிக்க ‘மொபைல் ஆப் Android/ I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.