• Fri. Jan 24th, 2025

சென்னையில் 13 விமானங்கள் ரத்து

Byவிஷா

Dec 12, 2024

கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி சென்னையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கொச்சி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், காலை 10.50 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் ஸ்பைஸ்ஜெட், பகல் 12 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ, பகல் 12.35 மணிக்கு சிலிகுரி செல்லும் ஏர் இந்தியா, பகல் 1.55 மணிக்கு இலங்கை யாழ்ப்பாணம் செல்லும் இண்டிகோ, இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா என 7 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், சென்னைக்கு காலை 10.20 மணிக்கு வரவேண்டிய கொச்சி ஸ்பைஸ்ஜெட், பகல் 1.45 மணி – திருவனந்தபுரம் ஏர் இந்தியா, மாலை 3 மணி – மதுரை இண்டிகோ, மாலை 5.10 மணி – யாழ்ப்பாணம் இண்டிகோ, மாலை 5.55 மணி – கர்நாடக மாநிலம் சிவமுகா ஸ்பைஸ்ஜெட் மற்றும் இரவு 10.05 மணிக்கு வரவேண்டிய கொல்கத்தா ஏர் இந்தியா என 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் ஒரேநாளில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் விமானப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்த 13 விமானங்களில் 9 விமானங்கள் நிர்வாகக் காரணம், 2 விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு, 2 விமானங்கள் மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் நிலவிய மோசமான வானிலையால், டெல்லியில் இருந்து வந்த விமானம் பெங்களூருவில் தரையிறக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது. வானிலை சீரானதும், விமானம் அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தது.