• Wed. Dec 11th, 2024

78% பள்ளிகளில் ஆன்லைன் வசதி இல்லையாம்.., ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் !

கொரோனா பலரது வாழ்வியலையும் மாற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் வகுப்பு அறைகள் வீட்டின் அறைகளாக மாற்றி பல மாதங்களாகின்றன.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் 78 சதவீதம் பள்ளிகளில் இணையவசதியே இல்லை என மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-2020-ம் கல்வியாண்டின் கணக்கீட்டின் படி, 22 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளதாகவும், அதிலும் 12 சதவீதத்துக்கும் குறைவான அரசுப்பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதாகவும், மத்திய அரசின் UDISE ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் கணினி வசதி இருப்பதாகவும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான பள்ளிகளில் கணினி வசதி இருப்பதாகவும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடகிழக்கு மாநிலங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மிகப்பெரிய சொத்தான கல்வியை எப்படியாவது அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது ஒவ்வொரு அரசின் மிகமுக்கிய கடமையாகும்.