சென்னையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து கடற்கரை திறக்கப்பட்ட 10 நாட்களில் தடையை மீறி கடலில் குளிக்கச் சென்ற ஆறு பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல தடைவிதித்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மெரினா கடற்கரை திறந்த முதல் நாளிலேயே ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகினர். அதேபோல் ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவான்மியூர் கடற்கரையில் ஒருவரும், பெசன்ட் நகரில் ஒருவரும் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர் . இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது
இந்நிலையில் மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பள்ளி மாணவர் மாயமாகியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மெரினா கடற்கரையில் தடையை மீறி குளிக்கச் சென்ற போது அக்பர் என்ற மாணவர் மட்டும் மாயமானது தெரிய வந்துள்ளது.