• Sat. Mar 25th, 2023

50 ஆண்டுகள் கடந்த கீழ்வெண்மணி – பெரியார் சர்ச்சை

கீழ்வெண்மணி படுகொலை நடந்து 50 வருடங்களுக்கு மேலாகியும் , படுகொலை குறித்து பெரியார் கையாண்ட விதம் இன்றளவும் சர்ச்சையில் தான் உள்ளது. பெரியார் பட்டியலின மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினருக்கு ஆதரவக செயல்பட்டார் என்ற பேச்சு இன்று வரை பேசப்பட்டு வருகிறது. கீழ்வெண்மணி சம்பவமும் பெரியார் கையாண்ட விதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.


தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமம். தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக நடத்திவந்தனர். சாணிப்பால், சாட்டையடி என்று தங்களது வயலில் வேலை பார்ப்பவர்களுக்கு கொடிய தண்டனைகளை வழங்கி வந்தனர்.


மேலும் கடும்பஞ்சத்தின் காரணமாக கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடுத்துகிறார்கள். இந்த போராட்டத்தினை ஆரம்ப கட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் மூலம் கம்யூனிஸ்ட்கட்சியை சேர்ந்தவர்களை ஈடுபட்டு வந்தனர்.


இப்படி கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தும் போது அவர்களது தங்களுக்கான மரியாதையையும் கேட்க்கின்றனர். அதாவது கூலி உயர்வு போராட்டம் சமூக போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நிலக்கிழார்கள் அறிந்தனர்.


விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை படி நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967-ம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், பல மிராசுதார்கள் ஒப்புக்கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணியவைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர்.

அந்தச் சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச்சதிச் செயல் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் கொடூரத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


ஐந்தாயிரம் ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ ஐயர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.


1968 டிசம்பர் 25 முன்னிரவில் மிராசுதார்களின் அடியாட்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இருகூர் பக்கிரி கொல்லப்பட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என எல்லோரும் பயந்துகிடந்தார்கள். பக்கத்து ஊருக்குச் சென்று உதவி கேட்பதற்காக இளைஞர்கள் எல்லாம் ஊரைவிட்டுச் சென்றிருந்தார்கள். அதனால்தான் இரவு அந்தச் சம்பவம் நடந்தபோது ஊரில் பெரும்பாலும் பெண்களும்,

குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். அன்று இரவு தொழிலாளர் குடியிருப்புக்குள் நீலநிற போலீஸ் வேன் போய் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றார்கள். கோபாலகிருஷ்ண நாயுடுதான் அவர்களை வழிநடத்திச் சென்றார். ராமையாவின் குடிசை அந்த ஊரின் கடைசியில் இருந்தது. அந்தக் குடிசையைத் தாண்டிப்போக முடியாத நிலையில், அந்தக் குடிசைக்குள் பதுங்கிக்கொண்டால் விட்டுவிடுவார்கள் என நினைத்த தொழிலாளர் குடும்பத்தினர் அந்தக் குடிசைக்குள் இருந்தனர்.


ஆனால், கொடுங்கோல் எண்ணம் கொண்ட மிராசுதார்கள் மனம் இறங்கவில்லை. தொழிலாளிகள், பெண்கள், குழந்தைகள் பதுங்கியிருந்த அந்தக் குடிசையின் கதவை வெளியில் தாழ்ப்பாள் போட்டு ஒட்டுமொத்தமாகத் தீ மூட்டி எரித்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்கத் தொடங்கியவேளையில், குடிசைக்குள் இருந்துவந்த கூக்குரல் எதனையும் காதில் வாங்கவில்லை, அந்தக் கும்பல்.

அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் குடிசைக்கு வெளியில் கதறிக்கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் நெருப்பில் தூக்கி வீசினர். இரவு 8 மணிக்குச் சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்துக்குத் தெரிந்தும் காவல் துறை இரவு 12 மணிக்கு வந்துள்ளது. இரவு 2 மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. மறுநாள் காலை 10 மணிக்குக் குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்தது. மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது, அரை படி நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்துக்காக மிராசுதார்கள் அளித்த பரிசாகும்.


மிராசுதார்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும்போதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.


இந்தக் கோர சம்பவத்தை அறிந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.ராமமூர்த்தி தலைமையில் வெண்மணி கிராமத்தினுள் நுழைந்தனர். வெண்மணியில் நடந்த இந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை.

பண்பாடு, நாகரிகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின்மீது குறைந்தபட்ச இரக்கம்கூடக் காட்டவில்லை. கம்யூனிஸ்டுகள் மட்டுமே போராடி வந்தனர்.


மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் வெண்மணி படுகொலைகளுக்கு எதிராக அன்றைய முதலமைச்சர் அண்ணா, கணபதியா பிள்ளை தலைமையில் தீர்ப்பாயம் அமைத்தார். ஆனாலும், அடிப்படையான ஆதாரமான உண்மை வெளிவரவில்லை. வெண்மணி சம்பவத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த கோரச் சம்பவம் குறித்து அன்று சமூக நீதி பேசிய பெரியார் ஏன் மெளனமாக இருந்தார் என்ற கேள்வி எழுகிறது.இது குறித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் விளக்கம் அளிக்கபட்டது. அதாவது டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்தது 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பது டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் ஆசிரியர் கி. வீரமணி குறிப்புகள் எழுதியுள்ளார்.

அதன் பிறக ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்றத் தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார். 12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு.


“எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும்.

ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள்.

ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்கு கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.


கீழ்வெண்மணி சம்பவத்தில் கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.


இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.


ஆனால் பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்கு கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின். எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாகச் சொல்வது எங்குமே பொருந்தாது. இன்னொரு முக்கிய விசயம். ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயன்ற போது பெரியார் “ என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு” எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதை கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.


கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி’ இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


கீழ்வெண்மணி சம்பவம் குறித்து இன்றளவும் பெரியார் கையாண்ட விதம் ஒரு சர்ச்சைக்குள் தான் இருந்து வருகிறது. திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் ஒருவருக்கு ஒருவர் முரண்பாடான கருத்துகளை தான் முன் வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *