சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து, 2 தினங்களில்,ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டு, கடத்தல் பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ. ஒரு கோடி மதிப்புடைய, 971 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்திக்கொண்டு வந்த ஆண் பயணியிடம், விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்றும், இந்த கும்பலைச் சேர்ந்த மற்றொரு பயணி, நேற்று மற்றொரு விமானத்தில், தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு பெருமளவு கஞ்சா கடத்திக் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் முழு உஷார் நிலையில், போதைப் பொருளை கண்டுபிடிக்கக்கூடிய மோப்பநாய் உதவியுடன், தாய்லாந்து நாட்டிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளின் உடைமைகளை மோப்பநாய் மூலம் பரிசோதித்தனர்.
இந்த நிலையில் நேற்று வந்த ஒரு விமானத்தின் பயணிகளை சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆண் பயணியின் உடமைகளை மோப்ப நாய் மூலம் சோதிக்கும் போது, அந்த பயணியின் உடமைக்குள் போதை பொருள் இருப்பதற்கான சைகையை, மோப்ப நாய் காட்டியது.
இதை அடுத்து அந்த பயணி வைத்திருந்த அட்டைப்பெட்டிகளை சோதித்தனர். அதனுள் மிகப்பெரிய அளவில் பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்தப் பயணியிடம் இருந்து, 5 கிலோ, கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 5 கோடி.
சென்னை விமான நிலையத்தில், ஏற்கனவே பிடிபட்ட ரூ. ஒரு கோடி மதிப்புடைய கஞ்சா போதை பொருளை கடத்தி வந்த நபரும், தற்போது ரூ.5 கோடி மதிப்புடைய போதை பொருளை கடத்தி வந்த நபரும், ஒரே போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரு தினங்களில் ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.