• Wed. Dec 11th, 2024

தினமும் 5 மணி நேரம் மின்வெட்டு.. இலங்கை நாட்டின் பரிதாப நிலை

இலங்கையில் பொருளாதார பிரச்னை எதிரொலியாக மின்வெட்டு பிரச்னை தீவிரமடைந்துள்ளது.

போதிய மின்னுற்பத்தி இல்லாததால் இன்று 4 மணி நேரம் 40 நிமிடத்திற்கு மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக இலங்கை பொது சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மின்னுற்பத்தி நிலையங்களும் பெரும்பாலான பங்க்குகளும் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அன்னியச் செலாவணி இல்லை என இலங்கை அரசு முதன்முறையாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது.

2 கப்பல்கள் நிறைய எரிபொருள் வந்துள்ளதாகவும் ஆனால் அதற்கு பணம் கொடுத்தால்தான் வெளியே எடுக்க முடியும் என்ற நிலை உள்ளதாகவும் எரிசக்தி துறை அமைச்சர் உதயா கம்மன்பிலா தெரிவித்தார். மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் வாங்க இயலாத நிலை நீடிப்பதால் அதற்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சர்களுடன் அதிபர் கோத்தபய ராஜபக்ச அவசர ஆலோசனையை மேற்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகவும் அன்னிய செலாவணி கையிருப்பு காலாவதியானதாலும் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் விலை மிக மோசமாக உயர்வடைந்துள்ளது. உணவு பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பித் தந்தாக வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது. இதன் காரணமாக இலங்கை உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து நிதி உதவிகளை பெற்று வருகிறது.