

தமிழர்களின் பழமையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் இடங்களில் முக்கியமானது ஆதிச்சநல்லூர் . அங்கு நடந்த ஆய்வில் தங்கத்தால் ஆன காதணி கிடைத்திருக்கிறது.
ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இங்கு மண்தாழிகள் அதிக அளவில் கிடைத்துவருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் இடத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆதிச்சநல்லூரில் 1902ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த போது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் 4 கட்ட அகழாய்வு பணி நடந்தது.அந்த அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் தற்போது நடந்து வரும் அகழாய்வு பணியில் 120 வருடங்களுக்கு பிறகு இந்த தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
