• Fri. Apr 19th, 2024

300 மின் ஊழியர்கள் நள்ளிரவில் கைது

ByA.Tamilselvan

Oct 3, 2022

புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்திய மின் ஊழியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து மின் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதுவை முழுவதும் இருளில் மூழ்கியதால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கிழக்கு கடற்கரை சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என கூறியிருந்தனர்.
அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி போலீசாரால் தேடப்படும் மின் துறை ஊழியர்கள் தலைமறைவாக இருக்க உடந்தையாக இருப்பது சட்டவிரோதமானது. ஆகையால் போலீசாரால் தேடப்படும் நபர்கள் இருந்தால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வேலை நேரத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும். இப்போது உடனே கலைந்து செல்லுமாறும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்து 5 நிமிடம் அவகாசம் வழங்கினர். அதன் பிறகும் அவர்கள் கலைந்து போகாததால் நள்ளிரவு 11 மணி அளவில் 300-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களை கைது செய்தனர். மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *