
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியில் கடந்த 3 நாட்களாக வெறி நாய் ஒன்று சுமார் 30க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. காயம் அடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வெறிநாயை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் போதிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் மூன்று நாட்களாகியும் இன்னும் அந்த நாய் பிடிபடாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை அந்த வெறி நாய் ஆடு, மாடு, கோழிகளையும் கடித்து குதறியது. இதனால் ஆத்திரமடைந்த கால்நடை வளர்ப்போர்கள் அதன் உரிமையாளர்கள் நேற்று காலை கூமாபட்டி பஸ் ஸ்டாண்டில் தாங்கள் கால்நடைகளுடன் வந்து மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் காயமடைந்தவர்களின் உறவினர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூமாபட்டி, வத்திராயிருப்பு போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நாயை இரவுக்குள் பிடித்து விடுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். கொடிக்குளம் பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை வெளியூர்களில் இருந்து வரவழைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் அந்த நாய் பிடிபடவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,
“அந்த வெறி நாய் கடிக்க துவங்கிய போதே பேரூராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களுக்கு எவ்வளவு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. பாதிப்பு கணிசமாக அதிகரித்த பின்னர் நடவடிக்கை எடுக்கிறது. மேலும் அந்த ஒரு நாயை மட்டும் தான் குறி வைத்து தேடுகின்றனர். ஆனால் அதே போல் ஊர் முழுவதும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அந்த நாய்களால் பாதசாரிகள் மிகவும் அச்சத்துடனே நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இரவு நேரத்தில் நாய்கள் ஊர் முழுவதும் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. வெளியூர் சென்று இரவு ஊர் திரும்பும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் வீடு சென்று சேர முடிகிறது. அவற்றை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதே நிலைதான் வத்திராயிருப்பு பேரூராட்சியிலும் நிலவுகிறது. எனவே இதன் பிறகாவது கூமாப்பட்டி, வத்திராயிருப்பு ஆகிய பேரூராட்சி நிர்வாகங்கள் தாங்கள் பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என்றனர்.
