• Tue. Dec 10th, 2024

அங்கன்வாடி பணியிடங்களில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% இடஒதுக்கீடு – தமிழக அரசு

Byமதி

Nov 10, 2021

தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் இனசுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் வெளியிடப்படும் இடஒதுக்கீட்டு ஆணைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் முதன்மை அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோரை கொண்டு நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களை நேரடி நியமனங்களில் நிரப்பும் போது விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.