தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது மண்டலம் 13வது வார்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி, குடியிருப்போர் பொது நலச் சங்கம் சார்பில் பல்லாவரம் அலுவலகத்தில் பெருந்திரள் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

பல்லாவரம் ரயில்வே நிலைய சாலையில் உள்ள ராமசாமி செட்டி குளத்தில் மழைநீர் சேமிப்பு பணிக்காக அரசு ஒதுக்கியுள்ள ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ரயில்வே நிலைய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஈமகாரிய மண்டபத்தை மீட்டுத் தரக்கோரியும், சாவடி தெருவின் இறுதிப் பகுதியில் நிரந்தர கால்வாய் அமைத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் என இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது:-
கடந்த ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக சாலை, மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மேலும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சியிடம் ஏற்கனவே மூன்று முறை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், தற்போது நான்காவது முறையாக மனு அளிக்கப்போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக இன்று மனுவை உதவி ஆணையரிடம் அளித்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சினைகளை நேரில் ஆய்வு செய்து சாலை மற்றும் கால்வாய் பணிகளை மேற்கொண்டு, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதுடன் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என குடியிருப்போர் பொது நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.




