


கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்வதாக அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:- மண்டியா, மைசூரு மண்டலத்தில் ஜனதா தளம் (எஸ்) -காங்கிரஸ், கட்சிகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை பா.ஜனதாவை நீங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன. அந்தக் கட்சிகள் ஊழல் கொள்ளையை நடத்துகின்றன. இரட்டை என்ஜின் அரசு இந்த 2 கட்சிகளின் ஆட்சியையும் நாங்கள் பார்த்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது டெல்லியின் ஏ.டி.எம். ஆக செயல்படும். ஜனதா தளம் (எஸ்) ஆட்சி செய்தால், அது ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக இருக்கும். இந்த 2 கட்சிகளும் ஊழல்கள் மூலம் கர்நாடகத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன. அதனால் ஊழல், குடும்ப அரசியலில் இருந்து கர்நாடகத்தை விடுவிக்க வேண்டும். கர்நாடகத்தில் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்ய பா.ஜனதாவுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் கர்நாடகத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வோம். காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ஊழல், மதவாத அரசியல் செய்கின்றன. மேலும் குற்றம் செய்வோரை பாதுகாக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, நான் முதலில் மண்டியாவில் இருந்து தான் பிரசாரத்தை தொடங்கினேன். அப்போது பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக வந்தது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

