• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…..

ByKalamegam Viswanathan

Feb 27, 2023

சிவகாசி அருகே சோகம்…பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியானர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், முத்துமாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் யோசேபு (16). இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று யோசேபுக்கு பிறந்த நாள். பிறந்த நாளை தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர் கார்த்திக் (16), இவரது நண்பர்கள் ஸ்ரீகுமரன் (16), சங்கர் (16) ஆகியோருடன் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம், நண்பர்கள் அனைவருக்கும் வீட்டில் விருந்து வைக்க வேண்டும் என்று கூறினார். வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், தனது நண்பர்களுடன் செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.

ஸ்ரீகுமரன் மற்றும் சங்கருக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் இருவரும் கரையில் இருந்தனர். கண்மாய்க்குள் இறங்கிய யோசேபு, கார்த்திக் இருவரும் நீச்சலடித்து விளையாடிய நிலையில் திடீரென்று ஆழமான பகுதியில் சிக்கி அலறினர். இதனை கவனித்த கரையில் இருந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். உடனடியாக அந்தப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், நீரில் மூழ்கிய இருவரையும் தேடினர். அவர்களால் சிறுவர்களை மீட்க முடியாத நிலையில் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கண்மாய்க்குள் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த யோசேபு, கார்த்திக் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாளில் நண்பருடன் குளிக்கச் சென்ற சிறுவனும், அவரது பள்ளி நண்பரும் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.