• Fri. Apr 18th, 2025

2 ஏர் இந்தியா விமானங்கள், திடீரென ரத்து..,

ByPrabhu Sekar

Apr 12, 2025

சென்னை- டெல்லி- சென்னை, 2 ஏர் இந்தியா விமானங்கள், திடீரென ரத்து. அதைப்போல் 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி.

சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, மும்பை, அந்தமான், கொச்சி, உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட விமானங்கள், சுமார் 3 மணி நேரம் வரை, தாமதமாக இயக்கப்படுவதோடு, சென்னை- டெல்லி- சென்னை 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்று, மழையுடன், மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

விமானங்கள் தாமதம் குறித்து, பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் இல்லாததால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெருமளவு தவிப்பு.

டெல்லியில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானமும், அதைப்போல் சென்னையில் இருந்து, இன்று காலை 6 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதோடு இன்று அதிகாலை 4.40 மணிக்கு அந்தமான் விமானம், டெல்லிக்கு காலை 5.55 மணி, காலை 9.50 மணி விமானங்கள், மும்பைக்கு காலை 6.40 மணி விமானம், கொச்சிக்கு காலை 7:55 மணி விமானம், பாட்னாவுக்கு காலை 11:40 மணி விமானம் மற்றும் சர்வதேச விமானங்களான ஹாங்காங், ஃபிராங்க்பார்ட், மொரிசியஸ், பாங்காக் உட்பட 12 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் சிங்கப்பூர், டெல்லி, மொரிசியஸ், கோவை உள்ளிட்ட 9 வருகை விமானங்கள், மொத்தம் 21 விமானங்கள், திடீரென தாமதமாக இயக்கப்பட்டன. இதில் சில விமானங்கள் 3 மணி நேரம் வரையில் தாமதமாக இயக்கப்பட்டன.

ஆனால் இந்த விமானங்கள் தாமதங்கள் குறித்தும், அதற்கு என்ன காரணம் என்றும், விமானங்கள் எப்போது வரும், எப்போது புறப்பட்டு செல்லும் என்பது குறித்தும், பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, டெல்லியில் நேற்று இரவு ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானங்கள், மற்றும் டெல்லி வான்வெளியை கடந்து சென்னைக்கு வரும் விமானங்கள், போன்றவைகள் தாமதமாக வந்ததால், சென்னை விமான நிலையத்தில் இதைப் போன்ற தாமதங்கள், விமானங்கள் ரத்து போன்ற நிலை ஏற்பட்டன. இதுகுறித்து அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன என்று கூறுகின்றனர்.