• Sat. Feb 15th, 2025

அதிகாலையில் துயரம்… மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி

ByIyamadurai

Jan 29, 2025

பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜ், உஜ்ஜைன், ஹரித்வார், நாசிக்கில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது இந்த விழாவில், முதல் 15 நாட்களில் 15 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிலையில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தை அமாவாசையான இன்று (ஜனவரி 29) அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட சங்கமம் பகுதியில் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்டமாக தகவல் கிடைத்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வருகிறது. அதிகாலையில் நடந்த இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக புனித நீராடலுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினார். தற்போதைய நிலவரங்களை மதிப்பாய்வு செய்து, கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த உடனடி ஆதரவு நடவடிக்கைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.