வாணியம்பாடியில் 1903ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் 200 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின் 118-வது நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சென்னகேசவ மலை நந்தி துருவத்தில் உருவாகும் பாலாறு, கர்நாடக மாநிலத்தில் 90 கிலோமீட்டர், ஆந்திர மாநிலத்தில் 45 கிலோமீட்டர், தமிழகத்தில் 225 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடைசியாக காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.
இந்நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 12.11.1903 அன்று பாலாற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்தனர். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்துள்ள ஆங்கில நாளிதழில் (வுர்நு ஊயுடுடு) இந்த செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த நிகழ்வின் நினைவாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கச்சேரி சாலையில் வைக்கப்பட்டுள்ள பாலாறு நினைவு தூணுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பாலாற்றில் குப்பைகள் மற்றும் தோல் கழிவுகளை கொட்டாமல் அதிகாரிகள் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் விவசாய தேவைக்கும், குடிநீருக்கும் பயன்படும் இந்த பாலாற்றை அரசு பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.