என் மீது ஆதாரமற்ற புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், பச்சைத் தமிழர் காமராஜர் பிறந்த விருதுநகர் மண்ணில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பயணித்த வழியில், சாதாரண ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், அரசியலில் பொது நல சிந்தனையோடு பணியாற்றி வருகிறேன். 1996ல் இருந்து இன்று வரை உள்ளாட்சி முதல் அமைச்சர் வரை இருந்த அரசுப் பதவிகளில் சட்டவிதிகளுக்கு முரணாக நான் செயல்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் எப்படிப்பட்ட நேர்மையான அரசியல் வாதி என்பது என்னோடு பழகியவர்களுக்கும் என்னோடு இருக்கும் தொண்டர்களுக்கும் என்னோடு இருக்கும் தொழில் அதிபர்களுக்கும் நன்றாக தெரியும். அடிமட்டத் தொண்டனாக தொடங்கி அரசு மற்றும் கட்சிப் பொறுப்புகளில் பணியாற்றியபோது என் மனசாட்சியுடன் நேர்மையாகவும் நாணயமாகவும் யாரும் என் மீது விரல் நீட்டி குற்றம் சுமத்த முடியாதபடி அரசியலில் பயணித்து வருகிறேன். எனது அரசியல் வளர்ச்சியை கண்டு காழ்ப்புணர்ச்சியும் தீய எண்ணமும் கொண்டவர்கள் எந்த வித ஆதாரமும் இல்லமால் தவறான வதந்தியான செய்திகளை தொடர்ந்து திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.
அந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. ஆதாரம் இருந்தால் சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். நானும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். முகாந்திரம் இல்லாமல் என்னை அரசியலில் நேரில் எதிர்கொள்ள திராணியற்றவர்கள் தூண்டுதல் செய்து எனக்கு எதிராக சதி வலை பிண்ணி வருகிறார்கள். தொடர்ந்து தவறான பாதையில் எனக்கு எதிராக அநியாயமாக செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறேன். குறிப்பாக விஜயநல்லதம்பி என்பவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பது குறித்து பத்திரிக்கை வாயிலாக நிறையவே அறிந்துள்ளேன். ஏராளமான புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு வேலை வாங்கித்தருவதாக கூறி தமிழகம் முழுவதும் மோசடி கும்பலாய் செயல்பட்டு பல்வேறு வழக்குகளில் அவர் சிக்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் இது போன்ற மோசடி பேர் வழிகளை நம்ப வேண்டாம். எனது பெயரை கூறி அவர் தப்பிக்க நினைக்கின்றார். விஜயநல்லதம்பிக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பினால் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் செய்த தவறை மறைத்து எதாவது ஒரு விஐபி மீது பழி சுமத்துவது விஜயநல்லதம்பிக்கு வாடிக்கையாக உள்ளது. பல்வேறு கட்சிகளில் இருந்து மோசடியில் ஈடுபட்டு அந்தந்த கட்சி விஐபிக்கள் மீது குற்றம் சொல்வதை விஜயநல்லதம்பி வாடிக்கையாக வைத்துள்ளார். இது போன்ற மோசடி பேர் வழிகளிடம் பொதுமக்கள் கவணத்துடன் இருக்க வேண்டும் இவ்வாறு கூறிப்பிடப்பட்டுள்ளது.