• Fri. Apr 19th, 2024

3வது முறையாக அதிபர் ஆகிறார் ஜி ஜின்பிங்!

Byகாயத்ரி

Nov 13, 2021

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு நேற்று முன்தினம் கூடியது. இதில் தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக அதிபர் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 2013 மார்ச் 14-ம் தேதி சீன அதிபராக பதவியேற்றார். கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, தற்போது 2-வது முறையாக அதிபராகப் பதவி வகித்து வருகிறார்.


கடந்த 2018 மார்ச் மாதம் சீனநாடாளுமன்றம் கூடியது. அதில்அதிபர் பதவிக் கால வரம்பை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அதிபர் பதவிக்கான 10 ஆண்டு வரம்பு, சட்டபூர்வமாக நீக்கப்பட்டு, அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.இந்த பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த மத்திய குழு பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் கூடியது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 400 பேர் பங்கேற்றனர். இதில் தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக அதிபர் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆண்டு கால வரலாற்றில் கட்சியின் நிறுவனர் மா சேதுங், அதிபர் டெங்ஜியோபிங்குக்கு பிறகு 3-வதுமுறையாக இத்தகைய தீர்மானத்துக்கு மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சியின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு மத்தியில் நடத்தப்பட உள்ளது. அதில் கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு 3-வது முறை அதிபராவது உறுதி செய்யப்படும். தற்போது 68 வயதாகும் ஜி ஜின்பிங், தனது ஆயுள் முழுவதும் சீனாவின் அதிபராக நீடிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஹாங்காங் போன்று தைவானை தன்னோடு இணைத்துக் கொள்ள சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பதிலடியாக தைவானின் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் பகிரங்கமாக அறிவித்துள் ளார்.


சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வதுமுறையாக அதிபர் பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தைவான் பிரச்சினையில் அமெரிக்கா, சீனா இடையிலான பனிப்போர் உச்சத்தை தொடும் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *