• Fri. Apr 18th, 2025

வாக்களிக்க ரூ.500 லஞ்சம் – பெண் எம்.பிக்கு சிறை….

Byadmin

Jul 26, 2021

தேர்தலில் வாக்களிக்க லஞ்சப் பணம் கொடுத்தால் தான். வாக்குகளை பெற முடியும் என்ற மனநிலைக்கு அரசியல் கட்சிகளும் வாக்குக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வாக்களிப்போம் என்ற மனநிலைக்கு மக்களும் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக ஆகிய பெருங்கட்சிகளும் தமிழக மக்களும் கையில காசு வாயில தோசை என்று பழமொழிக்கு ஏற்ப மாறிவிட்டார்கள். தமிழகம் தான் இப்படி என்றால் நாடு முழுவதும் இதே நிலை தான். ஜனநாயகமா? பணநாயகமா என்றால் மக்கள் பண நாயகத்தின் பின்னால் தான் நிற்கிறார்கள். தேர்தல் துவங்கும் போது வீராப்பாக சீறிக்கொண்டு வரும் தேர்தல் ஆணையம் தேர்தல் நெருங்க நெருங்க பொட்டி பாம்பாக மாறிவிடும். இது தொடர்பாக நாடு முழுவதும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் தூசி படிந்த கோப்புகளாக உள்ளன. தேர்தல் வழக்கு என்றால் 5 ஆண்டு வரை தீர்ப்பு சொல்ல நீதிபதிகளுக்கு நேரம் இருக்காது. தீர்ப்பு வரும் நேரத்தில் அடுத்த தேர்தலே வந்துவிடும். இதனால் நியாய சிந்தனை உள்ள மக்களுக்கு நீதித்துறையின் மீதும் நம்பிக்கை இழந்து இருந்தனர். பட்டபகலில் வாக்குக்கு பணம் கொடுக்கிற அவலத்தை கண்டு கொள்ளாத காக்கிகளும் உண்டு. அதன் காரணமாகவே அமைச்சர் எம்.பி எம்எல்ஏ என உயர் பொறுப்புகளில் உள்ளவர்களே பணபட்டுவாடா செய்தால் போலீஸ் கையாளாகமல் பிசைந்துகொண்டு இருக்கத்தான் செய்யும். இப்படி லஞ்சம் கொடுப்பது குற்றம் என்று நீதிமன்றத்தில் உள்ள ஒரு சுத்தியல் ஓங்கி பெண் எம்.பி. ஒருவரின் மண்டையில் அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய வரலாற்றில் இது முதல் தீர்ப்பாக முத்தான தீர்பாக பார்க்கப்படுகிறது.தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியான ராஸ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மகாபூபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மலோத் கவிதா என்பவருக்காக அவருக்கு நெருக்கமான சவுகத்அலி என்பவர் வாக்காளர்களுக்கு வாக்களிக்க தலா ரூ.500 லஞ்சமாக பணப்பட்டுவாடா செய்த போது பறக்கும்படையால் கையும் களவுமமாக பிடிக்கப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம் நிருபனமானதால் விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளிகளான எம்.பி. மலோத் கவிதா சவுகத் அலி ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் நீதிபதி ஜாமீன் வழங்கினார். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முதன் முறையாக தீர்ப்பளித்தது இதுவே முதன் முறையாகும். மேல்முறையீடுக்கு வழி வகை செய்தமையால் இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க ஓட்டையும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்க பண நாயகம்.