நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர செயற் குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செங்கோடம் பாளையம் தேசியசிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு வீட்டில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜீன் சம்பத் கூறியதாவது..,
இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு, தேசிய சிந்தனை பேரவை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இன்றைக்கு ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் இங்கே நடைபெற்றிருக்கிறது. திருச்செங்கோடு கிரிவலப்பாதையில் அமைந்திருக்கின்ற எந்த ஒரு ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அது அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். சர்ச் ஆக இருந்தாலும் சரி புதிதாக உருவாக்கப்படுகின்ற பிறமத ஆக்கிரமிப்புக்கள் என எதுவாக இருந்தாலும் அந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றிட வேண்டும்.
சமீபத்தில் அந்த பகுதியில் அமைக்கப்பட்ட சர்ச் காரணமாக சில பேர் மதம் மாறி போய்விட்டு இப்ப அந்த இடத்தில் அவங்க வந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விநாயகர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த இடம் மீட்கப்பட வேண்டும். அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்கின்ற பெயர்ப்பலகை அங்கே வைக்க வேண்டும் இனி மேற்கொண்டு இருக்கின்ற எந்த ஆக்கிரமிப்பையும் அங்கு அனுமதிக்க கூடாது என்பது இங்கே முதல் தீர்மானமாக போடப்பட்டிருக்கிறது.
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் இந்த சுதந்திர தினத்தை நம்முடைய தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கூடிய வகையிலே கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் அந்த வேண்டுகோளை இந்து மக்கள் கட்சி முன்வைக்கின்றது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்கள் அங்கே பாரதமாதா திருக்கோயிலை அமைக்க விரும்பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அவருடைய கனவை நிறைவேற்றக்கூடிய வகையில் பாரத மாதாவிற்கு அது ஏதோ ஒரு மணிமண்டபம் என்கிற மாதிரி அதை திறந்து அந்த ஆலயத்திலேயே நடைபெற வேண்டிய பூஜைகள் அது மாதிரி இல்லாம அது ஒரு நினைவாலயம் வெச்சிருக்காங்க. இந்தச் செயல் பாரதமாதா பக்தர்களை புண்படுத்துகிறது. பாரதமாதா நினைவாலயம் என்றால் வேற அர்த்தமாகிறது. ஆனால் அது பாரதமாதா திருக்கோயில் என்று மாற்றப்படவேண்டும் இன்றைக்கு நாங்கள் அங்கே பாரதமாதா வழிபாட்டை துறவிகள் பெருமக்கள் ஆன்மீக அமைப்புகள் அனைவரும் இணைந்து அங்கே இந்த வழிபாட்டை நடத்த இருக்கின்றோம்.
தமிழகத்தில் மக்கள் ஆசி வேண்டி மத்திய மந்திரியாக பொறுப்பு எடுத்துக் கொண்டு இருக்கின்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஐபிஎஸ் அதிகாரி திரு அண்ணாமலை அவர்களும் ஒரு மிகப்பெரிய யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்கள் அந்த யாத்திரை மூலமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியினுடைய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்காக இந்த யாத்திரை நடைபெறுகிறது அதற்கான ஆதரவை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வெள்ளை அறிக்கை எனும் பெயரிலே நிதிநிலை தொடர்பாக நிதி அமைச்சர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் வொயிட் பேப்பர் அப்படிங்கிறது சட்டமன்றத்தில் தாக்கல் பண்ணனும் அதை நிருபர்களிடம் கொடுத்துவிட்டு இந்த தமிழ் குடிமக்கள் ஒவ்வொருவருடைய தலையிலும் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் இருக்குதுன்னு சொல்லி இருக்காரு. இதெல்லாம் தெரிஞ்சி தான் இவர்கள் ஆட்சிக்கு தேர்தல் வாக்குறுதி எல்லாம் தயார் செய்தாங்க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்கின்ற தன்னுடைய கையாலாகாத தனத்தை ஒப்புக் கொள்ளக்கூடிய வகையில் திவால் நோட்டீஸ் கொடுப்பது போல் இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்யத்தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள் நிர்வாகத்தில் தோல்வி அடைந்து விட்ட நிதி அமைச்சர் சம்பந்தமில்லாதது எல்லாம் பேசி மேலும் மேலும் இந்த அரசாங்கத்துக்கு மக்களுக்கு மிகப்பெரிய தொந்தரவை ஏற்படுத்தி இருக்காரு. ஸ்டாலின் இந்த நிதி அமைச்சரை மாற்றி விட்டு வேறு அமைச்சரை நியமிக்க வேண்டும். இந்த வேண்டு கோளை இந்து மக்கள் கட்சி முன் வைக்கின்றது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரைடு செய்து என்ன எடுத்தார்கள் ஒன்றுமே எடுக்கலைன்னு எழுதி கொடுத்து வந்திருக்கிறார்கள். வேலுமணிக்கு மக்கள் ஆதரவு மேலும் கூடியிருக்கிறது. இது மாதிரியான விஷயங்களில் கவனம் கொடுப்பதை விட்டு விட்டு 3ம் அலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வு அதே மாதிரி இந்த மின்கட்டணம் உயர்வால் கொதித்துப் போய் இருக்கும் மக்களை நலன்களை காப்பதில் முயற்சி எடுக்கணும். இந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்பதை கேட்டு கொள்கிறேன் என கூறினார்.
திருநாவுக்கரசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இதில் இந்து மக்கள் கட்சிதலைவர் அர்ஜீன் சம்பத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சவுந்தரம், சிவசேனாவின் மாநிலதுணைத்தலைவர் திருமுருக தினேஷ், ஆடிட்டர் ரமேஷ் மக்கள் நல இயக்க நிர்வாகி தனசேகரன், கொங்க தேச மக்கள் பேரவையை சேர்ந்த திருப்பூர் பாலன் மூர்த்தி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்டசெயலாளர் சபரி நாதன் செங்குந்தர் மகாஜனசங்க இளைஞரணி செயலாளர் சுந்தர், செங்குந்த மகாஜன கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் மனோகரன், அகரம் வெள்ளாஞ் செட்டியார் சங்கத்தலைவர் பாஸ்கரன், வன்னியர் சங்க தலைவர் செந்தில் போயர் சங்க நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.